காதலரை சந்தித்தது எப்போது? திருமணம் குறித்த நமீதாவின் அறிவிப்பு
- IndiaGlitz, [Friday,November 10 2017]
நடிகை நமீதாவின் திருமணம் குறித்து பிக்பாஸ் பங்கேற்பாளர்களில் ஒருவரான ரைசா வெளியிட்ட வீடியோ குறித்த செய்தியை காலையில் பார்த்தோம். இந்த நிலையில் நடிகை நமீதா தனது திருமணம் குறித்து அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். அவர் கூறியதாவது:
என்னுடைய திருமணம் நவம்பர் 24ஆம் தேதி என்னுடைய நண்பர் வீராவுடன் திருப்பதியில் நடைபெறவுள்ளது. வீரா தயாரிப்பாளர் மற்றும் நடிகராகவும் உள்ளார். இந்த திருமணம் காதல் மற்றும் பெற்றோர்கள் முடிவு செய்த திருமணம். எங்கள் இருவரின் நண்பர் சசிதர் எங்கள் இருவரையும் கடந்த ஆண்டு அறிமுகம் செய்து வைத்தார். அன்று முதல் நண்பர்களாக பழகி வந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் கடற்கரையில் நடந்த கேண்டில் லைட் டின்னரின்போது தனது காதலை மிகவும் நாகரீகமாகவும், ரொமாண்டிக்காகவும் வீரா தெரிவித்தார். அவருடைய அணுகுமுறையால் ஆச்சரியம் அடைந்து என்னால் ஓகே என்பதை தவிர வேறு எதுவும் சொல்ல முடியவில்லை.
நாங்கள் இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொண்டோம். எனக்கேற்ற ஒருவர் கிடைத்திருப்பதில் உண்மையில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். குறிப்பாக கடந்த மூன்று மாதங்களில் நான் அவரை கிட்டத்தட்ட முழுவதுமாக புரிந்து கொண்டேன். நான் மிகவும் அதிர்ஷ்டசாலி என்றே நினைக்கின்றேன். எங்கள் காதலுக்கு உதவிய, ஆதரித்த, ஆசிர்வதித்த அனைவருக்கும் நன்றி' என்று நமீதா குறிப்பிட்டுள்ளார்.