முதல்வர் வேட்பாளர் குறித்து குஷ்பு கூறிய கருத்து: அதிமுகவில் சலசலப்பு!

  • IndiaGlitz, [Monday,December 21 2020]

தமிழகத்தில் வரும் மே மாதம் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும், திமுக தலைமையில் ஒரு கூட்டணியும் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திமுக கூட்டணிக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் தான் முதல்வர் வேட்பாளர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக சமீபத்தில் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஒருமனதாக கட்சியினரால் தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவில் உள்ள ஒருசில தலைவர்கள் திடீரென இந்த கூட்டணியின் முதல்வர் வேட்பாளரை பாஜக மேலிடம் தான் முடிவு செய்யும் என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக சட்டமன்றத்தில் இதுவரை ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாமல், ஒரு எம்எல்ஏவை கூட அனுப்பாத கட்சியான பாஜக, முதல்வர் வேட்பாளர் குறித்து பேசுவதா? என அதிமுக தொண்டர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக பிரபலமும் நடிகையுமான குஷ்பு ’யார் முதல்வர் வேட்பாளர் என்பதை பாஜக தலைமை முடிவு செய்யும் என்றும், இது தொடர்பாக பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா மற்றும் முதல்வர் பழனிசாமி இணைந்து பேசுவார்கள் என்றும் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.