'நான் என்ன செய்தால் உங்களுக்கு என்ன? நெட்டிசன்களின் கிண்டலுக்கு பதிலடி கொடுத்த கீர்த்தி ஷெட்டி ..!

  • IndiaGlitz, [Sunday,May 21 2023]

நடிகை கீர்த்தி ஷெட்டி பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டதாக சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கேலியும் கிண்டலும் செய்து வரும் நிலையில் 'நான் என்ன செய்தால் உங்களுக்கு என்ன? என பதிலடி கொடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ், தெலுங்கு திரையுலகில் இளம் நடிகைகளில் ஒருவர் கீர்த்தி ஷெட்டி என்பதும் தெலுங்கு திரை உலகில் அறிமுகம் ஆகி சமீப காலமாக தமிழ் திரையுலகில் இவர் நடித்து வருகிறார் என்பதும் தெரிந்ததே.. விஜய் சேதுபதி வில்லனாக நடித்த தெலுங்கு திரைப்படமான ‘உப்பன்னா’ என்ற தெலுங்கு திரைப்படம் மூலம் அறிமுகமாகி அதன் பின்னர் லிங்குசாமி இயக்கத்தில் உருவான ’வாரியர்’ வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான ’கஸ்டடி’ உள்பட ஒரு சில படங்களில் நடித்தார். தற்போது அவர் டொவினோ தாமஸ் நடித்து வரும் மலையாள திரைப்படமான ’ஏஆர்எம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் கீர்த்தி ஷெட்டி குறித்து ஒரு வதந்தி பரவி வருகிறது. 'உப்பன்னா’ படத்தில் பார்த்த கீர்த்தி ஷெட்டி போல் தற்போது இல்லை என்றும் அவர் 19 வயதிலேயே தனது லுக்கை மாற்றுவதற்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டதாகவும் நெட்டிசன்கள் கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர். இது குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் கீர்த்தி ஷெட்டி கூறிய போது ’சமூக வலைதளங்களில் முழுக்க முழுக்க நெகட்டிவிட்டி தான் அதிகம் பகிரப்பட்டு வருகிறது, பாசிட்டிவ் விமர்சனங்களை பார்க்கவே முடியவில்லை என்று தெரிவித்தார்.

மேலும், ‘நான் என்ன செய்து கொண்டால் உங்களுக்கு என்ன? ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமாக தோற்றத்தை கொண்டு வரவேண்டும் என்பதற்காக அனைத்து நடிகர் நடிகைகள் செய்வதை தான் நானும் செய்துள்ளேன்’ என்றும் அவர் பதிலடி கொடுத்துள்ளார். அவரது இந்த பதிலடி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.