சசிகலாவின் ஆட்டம் ஆரம்பமாகிவிட்டது: 'கபாலி' வசனத்துடன் தமிழ் நடிகையின் டுவீட்

தமிழக அரசியலில் சசிகலாவின் ஆட்டம் ஆரம்பம் ஆகிவிட்டது என தமிழ் நடிகை ஒருவர் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா கடந்த 27ஆம் தேதி சிறையில் இருந்து விடுதலை ஆனார் என்பதும் இருப்பினும் அவர் பெங்களூரில் உள்ள விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் இன்று காலை சசிகலா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாக தகவல்கள் வெளிவந்த நிலையில் சற்று முன்னர் அவர் பெங்களூரில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி தனது காரில் வெளியேறிய புகைப்படம் வைரலாகி வருகிறது

இந்த காரில் அதிமுக கொடி இருந்ததால் அதிமுகவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா தான் என்றும் இது குறித்த வழக்கு நிலுவையில் இருப்பதால் அவர் அதிமுக கொடியை பயன்படுத்துவதில் எந்த ஒரு தவறும் இல்லை என்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் சசிகலா காரில் அதிமுக கொடி இருந்தது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

இந்த நிலையில் அதிமுக கொடியுடன் கூடிய காரில் மருத்துவமனையில் இருந்து வெளியேறும் புகைப்படத்தை தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ள நடிகை கஸ்தூரி, ‘சசிகலாவின் ஆட்டம் ஆரம்பம் ஆகிவிட்டது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் ’கபாலி’ படத்தில் வரும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் டயலாக்கான ‘வந்துட்டேன்னு சொல்லு, திரும்பி வந்துட்டேன்னு சொல்லு’ என்ற வசனத்தையும் அவர் பதிவு செய்துள்ளார். கஸ்தூரியின் இந்த டுவீட் இணையதளங்களில் வைரலாகி வருகிறது