கன்னத்தை தடவியதை கூறியது குற்றமா? வருத்தம் தெரிவித்த கஸ்தூரி
- IndiaGlitz, [Thursday,April 11 2019]
எம்ஜிஆர், லதாவை தடவின மாதிரி சிஎஸ்கே அணி இந்த தடவு தடவுகிறதே என்று நேற்று முன் தினம் நடைபெற்ற ஐபிஎல் போட்டி குறித்து கருத்து தெரிவித்த கஸ்தூரிக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது. குறிப்பாக நடிகர் சங்கம், எம்ஜிஆர் ரசிகர் மன்றம், நடிகை லதாவும் கஸ்தூரிக்கு தங்களது கடும் கண்டனங்களை பதிவு செய்து வரும் நிலையில் தற்போது தனது கருத்து யாரையாவது புண்படுத்தியிருந்தால் அதற்காக தான் வருந்துவதாக நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது பதிவு பின்வருமாறு:
எம்ஜிஆர் காதல் காட்சியில் நடித்ததில், கதாநாயகியின் கன்னத்தை, கரத்தை, தடவியதில் என்ன தவறு உள்ளது? அதை மேற்கோள் காட்டுவதில் என்ன தவறு உள்ளது? இதில் கண்ணியமும் பெண்ணியமும் என்ன கெட்டுவிட்டது? நான் வாத்தியாரின் காதல் ரசம் சொட்டும் பாடல்களை ரசிக்கும் எண்ணற்றவர்களில் ஒருவள். அவரை விமர்சிக்கும் எண்ணம் சிறிதும் எனக்கு இல்லை.
புரட்சி தலைவர் ஒப்பற்ற தலைவர், தொண்டர்களின் இதயதெய்வம் என்பது எவ்வளவு உண்மையோ, நான் விரும்பும் நவரசகலைஞன் என்பதும் உண்மை. தெய்வத்தை இழிவுபடுத்தி விட்டேன் என்ற குற்றசாட்டை வன்மையாக மறுக்கிறேன். காமம், இழிவு, உடல் ரீதியான வெளிப்பாடுகள் தமிழ் கலாச்சாரத்திற்கு குறைவு என்ற மனப்பான்மையே இதற்கு காரணம். இந்து மத தெய்வங்கள் கூட காதல் லீலை புரிந்தவர்கள்தான்.
உடனே அமைதிப்படை அல்வா , தத்தோம் தகதிமி தோம் என்று தூக்கி கொண்டு வருபவர்களுக்கு - நான் மிகவும் அற்பணிப்புடன் நடித்த காட்சிகள் அவை. பொய்யாக அழுவது சுலபம். ஆக்ரோஷமாக நடிப்பது சுலபம். ஆனால் கவர்ச்சியை வெளிப்படுத்த மிகுந்த திறமையும் உழைப்பும் தேவை.
எம்ஜிஆர் அவர்களை தலைவராகவும் தெய்வமாகவும் மட்டும் பார்த்து நடிகராக அவர் வரலாற்றை மறைப்பது ரசிகனுக்கு அழகல்ல. இருப்பினும் இதில் யார் மனமும் புண் பட்டிருந்தால், என் மனமார வருந்துகிறேன்.
இவ்வாறு நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.