தற்கொலை செய்துகொள்வோர் எல்லாம் அனிதா அல்ல: கஸ்தூரியின் தன்னம்பிக்கை டுவீட்
Send us your feedback to audioarticles@vaarta.com
நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில் இந்த தேர்வில் தோல்வி அடைந்ததால் நேற்று இரண்டு மாணவிகள் பரிதாபமாக தற்கொலை செய்து கொண்டனர். இந்த தற்கொலைகளை கூட அரசியலாக்கி லாபம் பார்க்கும் அரசியல்வாதிகளின் மத்தியில் மாணவர்களுக்கு ஒரு பொருப்பான ஆலோசனையை நடிகை கஸ்தூரி தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். அவர் கூறியதாவது:
நீட் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. அதனை தொடர்ந்து தமிழகத்தில் இரண்டு மாணவிகள் தன்னுயிரை மாய்த்துக்கொண்ட செய்தி. நீட் தேர்வோ, பள்ளி இறுதி தேர்வோ, எந்த தோல்வியும் தற்காலிகம் என்பதை பிள்ளைகள் உணரவேண்டும். பிள்ளைகள் மட்டுமல்லாது, அவர்களை சுற்றி உள்ளோரும் இதை புரிந்துகொள்ளவேண்டும். நம்மவர்கள் பலரும், யாராவது தடுக்கிவிட்டால், அதை சொல்லிக்காட்டியே அந்த நபரை மன உளைச்சலில் வீழவைப்பதில் சூரர்கள்.. மற்றவர் கஷ்டத்தில் மீன் பிடிக்கும் கில்லாடிகள். தயவு செய்து சிறார்கள் படிப்பும் வாழ்க்கையும் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கொஞ்சம் கவனமாக நடக்கலாமே?
தேர்வில் ஒரு முறை தோற்றுவிட்டால் மனம் தளராமல் அதை சவாலாக ஏற்று மீண்டும் முயலவும், வெல்லவும். பிள்ளைகளுக்கு போதிய ஊக்கத்தை, ஆதரவை பெற்றோர்களும் ஆசிரியர்களும் நல்கவேண்டும். பிள்ளைகளின் படிப்பு விஷயத்தில் பல பெற்றோர்களே முதிர்ச்சியில்லாமல் நடந்துகொள்கிறார்கள். பெற்றோருக்கு முதலில் கவுன்சிலிங் தேவைப்படுகிறது!
இது போதாது என்று அரசியல் வேறு. நம் அரசியல்வாதிகள் , உண்மையாகவே கொள்கைரீதியாக நீட்-ஐ எதிர்ப்பவர்கள் சிலர் என்றால், தங்களுக்கு மெடிக்கல் சீட்டுக்கு வசூல் ஆகிக்கொண்டிருந்த டொனேஷன் கமிஷன் வகையறா நின்ற வயிற்றெரிச்சலில் பலர். அரசியல் தீர்வு வரும்போது வரட்டும்; அதுவரை மாணவர்கள் மனதை அலைபாய விடவேண்டாம். தற்கொலை செய்துகொள்வோர் எல்லாம் அனிதா அல்ல. அனிதாவை போல தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற எண்ணத்தை தூண்டுபவர்கள் மனிதர்களே அல்ல.
பிள்ளைகளே, நீங்கள் நினைக்கலாம், உங்கள் வாழ்க்கையின் அர்த்தமே போயிற்று, உங்கள் பலவருட கனவு தவிடுபொடியாயிற்று என்றெல்லாம். ஆனால் உண்மை என்ன தெரியுமா? வாழ்க்கை சக்கரம் எப்படி சுழலும் என்று யாருக்கு தெரியும்? இன்று கீழே இருப்பவர் நாளை மேலே செல்வார்... நாளை என்ன நடக்கும் என்று வாழ்ந்து பார்த்தால் தானே தெரியும்? இன்னும் சொல்ல போனால், இந்த உலகம் ஒரு பரிட்சையோடு நின்று விடுமா? எதிர்காலத்தில் எத்தனையோ சாதனைகள் உங்களுக்காகவே காத்துகொண்டு உள்ளன தெரியுமா?
சந்தோஷங்கள் மட்டுமே வாழ்க்கை இல்லையே, உலகம் உருண்டை, சுழலதான் செய்யும், இல்லையா? பகலும் இரவும் மாறி மாறித்தான் வரும்... இருள் வந்தால் அடுத்து வெளிச்சம் வரும் என்றுதானே பொருள்? இருளை பார்த்து மிரண்டு அவசரப்பட்டு வெளிச்சத்தை பார்க்காமலே போய்விடலாமா?
நாளை வாழ்க்கையில் இன்னும் எவ்வளவோ ஏமாற்றங்களை சந்திக்கவேண்டிவரலாம், நம்மில் பெருவாரியானவர்களுக்கு வாழ்க்கை என்பதே போராட்டம்தானே ? அந்த போராட்டத்தில் ஜெயிக்க இந்த சின்ன தோல்வி ஒரு பயிற்சி என்று எடுத்துக்கொள்ளுங்கள் செல்லங்களே! என் சொந்த அனுபவத்தில் சொல்கிறேன், எதை இழந்தாலும் நம்பிக்கையும் போராட்டகுணத்தையும் கைவிடாதீர்கள் செல்வங்களே!
சரியான நேரத்தில் பதிவு செய்த கஸ்தூரியின் இந்த கருத்துக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout