சினிமாவில் பாலியல் தொல்லை இருப்பது உண்மைதான். நடிகை கஸ்தூரி
- IndiaGlitz, [Friday,March 17 2017]
சமீபத்தில் தான் சொல்லாத கருத்தை ஒருசில உப்புமா இணையதளங்கள் எழுதியதாக நடிகை கஸ்தூரி ஆவேசமாக வீடியோ ஒன்றை பதிவு செய்திருந்தார் என்பதை பார்த்தோம். இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது அவர் சினிமாத்துறையில் தான் இருந்தபோது சந்தித்த கசப்பான அனுபவங்கள் குறித்து பிரபல வார இதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். கஸ்தூரி கூறியதாவது:
சினிமா மட்டுமின்றி எல்லாத்துறைகளிலும் பெண்களுக்கு பாலியல் தொல்லை இருக்கின்றது என்பதே உண்மை. இந்த விஷயம் சினிமாவில் மட்டும்தான் வெட்டவெளிச்சமாகிறது. என்னை பொருத்தவரையில் நான் சினிமாவில் நடித்து கொண்டிருந்தபோது சினிமாத்துறையில் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் ஒருசிலர் தான். ஆனால் சினிமாவையும் தாண்டி வெளியே உள்ள நபர்கள் அதாவது பெரிய தொழிலதிபர்கள், பணக்காரர்கள் எனக்கு கொடுத்த தொல்லைகள் மிக அதிகம். நடிகைகள் என்றாலே தப்பானவர்கள் என்று ஒருசில பணக்காரர்கள் மனதில் தோன்றிய வக்ரம்தான் இதற்கு காரணம். அந்த மாதிரியான நபர்களிடம் 'நான் அப்படிப்பட்டவள் இல்லை' என்று ஒதுங்கி சென்றுள்ளேன். இதன் காரணமாக ஒருசில படங்களில் இருந்து நான் வெளியேற்றப்பட்டதும் உண்மைதான்.
ஒரு பெண் தன்னுடைய உழைப்பால் உயர்ந்தால் கூட சந்தேக கண்களுடன் இந்த உலகம் பார்க்கின்றது என்பது தான் வேதனையான ஒரு விஷயம். நடிகை என்றில்லை ஒரு அலுவலத்திலோ அல்லது தொழிலதிபராகவோ ஒரு பெண் பெரிய இடத்திற்கு வந்தால், அவர் தப்பான வழியின் மூலம்தான் பெரிய இடத்திற்கு வந்திருப்பார் என்று சந்தேகக்கண்களுடன் பலர் பார்ப்பதுதான் வேதனையாக விஷயம்' என்று ஆதங்கத்துடன் கஸ்தூரி கூறியுள்ளார்.
மேலும் அரசியலுக்கு சினிமாக்கார்கள் வருவது குறித்து கருத்து கூறிய கஸ்தூரி, 'திருடர்கள், கொள்ளைக்காரர்கள், தன்னுடைய குடும்பம் மட்டுமே ஆட்சி செய்ய வேண்டும் என்ற சுயநலவாதிகள் எல்லாம் அரசியலில் இருக்கும்போது சினிமாக்காரர்கள் அரசியலுக்கு வருவதில் என்ன தவறு இருக்கின்றது. இன்றைக்கு கமல்ஹாசன், ஆர்.ஜே.பாலாஜி, ஜி.வி.பிரகாஷ், கவுதமி உள்பட பல சினிமாக்காரர்கள் ஜல்லிக்கட்டு, நெடுவாசல் போன்ற விஷயங்களில் பாசிட்டிவ் குரல் கொடுத்தனர். இன்றைய சினிமா இளைஞர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற விருப்பம் இருக்கின்றது. மாற்றம் முன்னேற்றம் என்பது இவர்களுக்கு மட்டும்தான் சொந்தமா, சினிமாக்காரர்களும் நல்லது செய்ய வேண்டும் என்று அரசியலுக்கு வரக்கூடாதா? என்று ஆவேச கேள்வி எழுப்பினார்,.