நான் சொல்லாத விஷயத்தை எழுதி வரும் உப்புமா இணையதளங்கள். நடிகை கஸ்தூரி ஆவேசம்
- IndiaGlitz, [Tuesday,March 14 2017]
சமீபத்தில் நடிகை கஸ்தூரி கூறியதாக ஒருசில இணையதளங்களில் சர்ச்சைக்குரிய செய்தி ஒன்று மிக வேகமாக பரவி வந்தது. சுசித்ரா டுவிட்டர் பிரச்சனைக்கு இணையாக இந்த செய்தி மிக வேகமாக பரவி வந்த நிலையில் இந்த செய்தி குறித்து நடிகை கஸ்தூரி விளக்கம் அளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோ பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது:
நடிகைகளை கேவலமாக சித்தரித்து அவர்களை பற்றி கேவலமாக செய்தி போட்டு பிழைப்பு நடத்தும் பொறுப்பில்லாத பத்திரிகைகளுக்கு எனது வணக்கங்கள். கடந்த சில நாட்களாக நான் கூறாத கருத்து ஒன்றை மசாலா தடவி செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இந்த செய்தியை ஒரு முன்னணி நாளிதழ் ஆரம்பித்து வைக்க, அதை பல இணையதளங்கள் தங்கள் கற்பனையை கலந்து எழுதி வருகின்றன.
மகளிர் தினத்தை முன்னிட்டு நான் கொடுத்த உண்மையான பேட்டி டைம்ஸ் ஆப் இந்தியாவில் வந்துள்ளது. அதன் லிங்க்கை நான் என்னுடைய சமூக வலைத்தளத்திலும் பதிவு செய்துள்ளேன். அந்த பேட்டியில் நான் சொன்ன விஷயங்கள் எதையும் எழுதாமல் நான் சொல்லாத விஷயத்தை ஒருசில உப்புமா இணையதளங்கள் எழுதியுள்ளன.
நடிகைகள் உண்மையானவர்கள், சுத்தமானவர்கள் ஒழுக்கமானவர்கள் என்பதை ஒவ்வொருவருக்கும் நிரூபிக்க தேவையில்லை. அதற்காக யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் நடிகைகள் குறித்து தவறாக எழுதினால் அதை பார்த்து கொண்டு சும்மா இருக்க வேண்டும் என்று அர்த்தமில்லை. இந்த விஷயம் என்னை மட்டும் பாதித்திருந்தால் நான் கவலைப்பட்டிருக்க மாட்டேன். ஆனால் என் சினிமா குடும்பத்தையும் பாதிப்பதால்தான் இந்த விளக்கம்.
நாட்டில் எத்தனையோ பிரச்சனை இருக்கின்றன. இனிமேலாவாது இதுபோன்ற கீழ்த்தரமான விஷயங்களை எழுதாமல், நல்ல விஷயங்களை எழுதுங்கள். இவ்வாறு நடிகை கஸ்தூரி கோபத்துடன் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.