அவசரப்பட வேண்டாம்: வைரமுத்து-சின்மயி விவகாரம் குறித்து கஸ்தூரி
- IndiaGlitz, [Wednesday,October 10 2018]
கவியரசர் வைரமுத்து மீது ஒருசில பெண்கள் சமூக வலைத்தளங்களில் பாலியல் குற்றச்சாட்டுக்களை கூறி வருவதும் இந்த குற்றச்சாட்டுக்களை பாடகி சின்மயி தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து பரபரப்பை ஏற்படுத்தி வருவதும் தெரிந்ததே. இந்த நிலையில் இதுகுறித்து அவசரப்பட்டு எந்த கருத்தையும் கூற விரும்பவில்லை என நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது முகநூலில் மேலும் கூறியதாவது:
வைரமுத்து அவர்களை நோக்கி சின்மயி எழுப்பியிருக்கும் குற்றச்சாட்டுக்களை பற்றி என் கருத்தை பலரும் கேட்கிறார்கள். வைரமுத்து அவர்களுடன் நான் பேச கிடைத்த சந்தர்ப்பங்கள் அனைத்திலும் தமிழையும் பெண்ணியத்தையும் மட்டுமே பகிர்ந்துகொண்டார். தவிர, அவரைப்பற்றி பலர் கூற கேள்விப்பட்டுள்ளேன். ஒரு எதிர்மறையான கருத்தும் இதுவரை என் காதுக்கு எட்டியதில்லை. அண்ணாந்து பார்த்த ஒருவர் மீது சரமாரியாக புறப்பட்டு வரும் பாலியல் குற்றச்சாட்டுக்கள் எனக்கு எதிர்பாராத அதிர்ச்சியே. ஒப்புக்கொள்கிறேன்.
சின்மயியும் எனக்கு நல்ல தோழியே ஆவார். நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையும் ஒருங்கே அமைந்த துணிவுள்ள பெண். அவர் முன்னெடுத்துவைக்கும் குற்றச்சாட்டுக்கள் மிகவும் வன்மையானவை. அவற்றின் உண்மைத்தன்மையை ஆராய்ந்தபிறகே சின்மயி பேச தொடங்கியிருப்பார் என்று எதிர்பார்க்கிறேன். இந்த சிக்கலான விஷயத்தில் சின்மயி எழுப்பிய குற்றச்சாட்டுக்களுக்கு திரு வைரமுத்து அவர்கள் பதில் சொல்லும்வரை வெறும் பார்வையாளரான நமக்கு அவசரப்பட்டு எந்த தீர்ப்பும் சொல்லும் தகுதியோ உரிமையோ இல்லை என்று கருதுகிறேன்.
இவ்வாறு கஸ்தூரி கூறியுள்ளார்.