இந்த ஆண்டின் சிறந்த திரைப்படம் காதல் – தி கோர் ஜோதிகாவை பாராட்டிய பிரபல நடிகை..!

  • IndiaGlitz, [Sunday,November 26 2023]

பிரபல மலையாள நடிகர் மம்முட்டியுடன் ஜோதிகா நடித்த “காதல் – தி கோர்” என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் பிரபல நடிகை ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் ஜோதிகாவின் நடிப்பை பாராட்டியுள்ளார்.

’தி கிரேட் இந்தியன் கிச்சன்’ திரைப்படத்தின் இயக்குனர் ஜியோ பேபி இயக்கத்தில் மம்முட்டி, ஜோதிகா நடிப்பில் உருவான திரைப்படம் “காதல் – தி கோர்”. மம்முட்டி கம்பெனி தயாரிப்பில் உருவான இந்த படம் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை வெளியான நிலையில் இந்த படம் ரசிகர்கள் மற்றும் ஊடகங்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

அரசு ஊழியரான மம்முட்டி தனது மனைவி ஜோதிகா மற்றும் மகளுடன் வசித்து வரும் நிலையில் தேர்தலில் போட்டியிட விண்ணப்பிக்கிறார். ஆனால் சில நாட்களில் அவருக்கு எதிராக அவருடைய மனைவி விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடுகிறார். சில ஆண்டுகளாக தனது கணவர் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டு வருவதாகவும் குறிப்பிடுகிறார்.

இந்த பிரச்சனையில் இருந்து மம்முட்டி எப்படி மீள்கிறார்? தன்பாலின உணர்வாளர்கள், தங்கள் குடும்பத்தினர்களை எப்படி எதிர்கொள்கின்றனர்? என்பதுதான் இந்த படத்தின் மீதி கதை. முதல் முறையாக மம்முட்டி தன்பாலின ஈர்ப்பாளராக நடித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜோதிகா மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

இந்த நிலையில் இந்த படத்தில் ஜோதிகாவின் நடிப்பை நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாராட்டியுள்ளார். இந்த ஆண்டின் மிகச்சிறந்த படம் “காதல் – தி கோர்” என்றும் வலுவான மற்றும் அழகான காட்சி அமைப்புகள் உங்களை மேலும் மெருகேற்றி உள்ளது என்றும் மம்முட்டி அவர்கள் மிகச் சிறந்த நாயகன் என்றும் இந்த படத்தில் உங்கள் இருவரின் நடிப்பை பார்த்துவிட்டு என்னால் நீண்ட நேரம் அதிலிருந்து வெளியே வர முடியவில்லை’ என்றும் குறிப்பிட்டுள்ளார்