சினேகன் விவகாரத்தில் சிறை சென்ற நடிகை.. இரண்டே நாளில் ஏற்பட்ட திருப்பம்..!

  • IndiaGlitz, [Friday,February 23 2024]

கவிஞர் சினேகன் நடத்தி வரும் சினேகம் பவுண்டேஷன் என்ற அமைப்பில் முறைகேடாக பண வசூல் செய்ததாக நடிகை ஜெயலட்சுமி மீது புகார் கூறப்பட்ட நிலையில் சமீபத்தில் அவர் கைது செய்யப்பட்டார். ஆனால் இரண்டே நாளில் அவர் ஜாமீன் பெற்று வீடு திரும்பி உள்ள நிலையில் அவர் தனது சமூக வலைதளத்தில் செய்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு சினேகன் நடத்தி வந்த சினேகம் பவுண்டேஷன் என்ற அமைப்பின் பெயரை பயன்படுத்தி நடிகை ஜெயலட்சுமி பணம் வசூல் செய்து மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இது குறித்து விசாரித்து வந்த நிலையில் கடந்த 20ஆம் தேதி ஜெயலட்சுமி வீட்டில் திடீரென சோதனை நடத்தினர். அதன் பின்னர் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து செய்யப்பட்ட ஜெயலட்சுமி கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து ஜெயலட்சுமி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்த நிலையில் நேற்று ஜெயலட்சுமிக்கு ஜாமீன் கிடைத்துள்ளதை அடுத்து அவர் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். ஜாமினில் வெளிவந்த ஜெயலட்சுமி தனது சமூக வலைத்தளத்தில் ’நீதி வெல்லும்’ ’வருங்காலம் பதில் சொல்லும்’ என்று பதிவு செய்ததோடு ’தனக்காக பிரார்த்தனை செய்து கொண்ட அனைவருக்கும் நன்றி’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.