எல்.முருகனை கொண்டாடுங்கள்: சூர்யா, கார்த்தி, விஷாலுக்கு தமிழ் நடிகை கோரிக்கை!

  • IndiaGlitz, [Sunday,July 11 2021]

தமிழகத்தைச் சேர்ந்த எல் முருகன் சமீபத்தில் மத்திய இணை அமைச்சராக பதவி ஏற்ற நிலையில் அவரை சினிமாத்துறையினர் கொண்டாட வேண்டும் என நடிகையும், பாஜக பிரபலமுமான காயத்ரி ரகுராம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்

சமீபத்தில் மத்திய இணை அமைச்சராக நியமனம் செய்யப்பட்ட எல் முருகன் அவர்களுக்கு தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை இணை அமைச்சர் பதவி கிடைத்துள்ளது. இந்த துறையின் கீழ்தான் சினிமா துறையும் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள சினிமா துறையினர் தற்போது புதிய ஒளிப்பதிவு சீர்திருத்த சட்டத்திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் தமிழக முதல்வரிடம் சென்று தங்களுடைய ஆதரவை கேட்பதற்கு பதிலாக எல் முருகனை கொண்டாட வேண்டும் என்றும் அவரிடம் இதுகுறித்து கோரிக்கை வையுங்கள் என்றும் சினிமாத்துறையினர்களுக்கு நடிகை காயத்ரி ரகுராம் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டிலிருந்து தகவல் மற்றும் ஒளிபரப்பு இணை மத்திய அமைச்சராக திரு. டாக்டர்.எல். முருகன் நியமிக்கப்பட்டுள்ளார், இதை நம் சினிமா துறையினர் கொண்டாட வேண்டும். அனைத்து தொழிற்சங்க, நடிகர்கள் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் கவுன்சில் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்ய வேண்டும். முதல்வரிடம் எதிர்ப்பு தெரிவிப்பதற்கும் ஆதரவைப் பெறுவதற்கும் பதிலாக, ஒளிப்பதிவு சீர்திருத்த சட்டம் பற்றி எல்.முருகன் அவர்களிடன் பேசுங்கள்’ என்று பதிவு செய்துள்ளார்.

மேலும் இந்த டுவிட்டை அவர் சூர்யா, கார்த்தி, விஷால், வெற்றிமாறன், கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர்களுக்கும் டேக் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.