25 வருட உறவை முறித்து கொண்ட கவுதமி.. உருக்கமான அறிக்கை..!

  • IndiaGlitz, [Monday,October 23 2023]

நடிகை கவுதமி தனது 25 வருட உறவை முறித்து கொள்வதாக உருக்கமான அறிக்கை வெளியிட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகை கௌதமி தனது சமூக வலைத்தளத்தில் 25 வருடங்களாக பாரதிய ஜனதா கட்சியில் இருந்த நிலையில் தற்போது அக்கட்சியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ’மிகவும் கனத்த இதயத்துடன் ஆழ்ந்த ஏமாற்றத்துடன் நான் பாஜகவின் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு எடுத்தேன்.

தேசத்தை கட்டி எழுப்ப எனது முயற்சிகளுக்கு பங்களிக்க 25 ஆண்டுகளுக்கு முன் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தேன். ஆயினும் இன்று நான் என் வாழ்க்கையில் நினைத்து கூட பார்க்க முடியாத அளவில், ஒரு நெருக்கடியான கட்டத்தில் உள்ளேன். கட்சி மற்றும் தலைவர்களிடமிருந்து எனக்கு எந்த விதமான ஆதரவும் இல்லை.

எனக்கு நம்பிக்கை துரோகம் செய்த ஒருவர் என் வாழ்நாள் சம்பாத்தியத்தை ஏமாற்றிவிட்டார். நான் 17 வயதிலிருந்து சினிமா, தொலைக்காட்சி, டிஜிட்டல் மீடியா என 37 வருடங்களாக எனது தொழில் வாழ்க்கை நீடித்து வந்துள்ளது. என் வாழ்நாள் முழுவதும் உழைத்தேன். இந்த வயதில் நான் பொருளாதார ரீதியாக பாதுகாப்பாக இருக்க, என் மகளின் எதிர்காலத்தை நல்லபடியாக அமைக்க, நானும் என் மகளும் பாதுகாப்பாக இருக்க வேண்டிய கட்டத்தில் உள்ளேன்.

ஆனால் திரு சி அழகப்பன் என்பவர் எனது பணம், சொத்து, ஆவணங்களை மோசடி செய்தது அதிர்ச்சி அளிக்கிறது. 20 ஆண்டுகளுக்கு முன் என்னை அவர் அணுகியபோது நான் பெற்றோர் இல்லாத, அனாதை என்றும், ஒரு கைக்குழந்தையுடன் தாயாக இருந்தேன் என்றும் அறிந்து கொண்டார். முதியவர் என்ற போர்வையில் அவர் என்னையும் எனது குடும்ப வாழ்க்கையையும் உள் வாங்கினார்.

20 ஆண்டுகளுக்கு முன் இந்த சூழ்நிலைதான் என்னுடைய நிலங்களை விற்பனை ஆவணங்களை அவரிடம் ஒப்படைத்தேன். சமீபத்தில் தான் அவர் மோசடி செய்தார் என்பதை கண்டுபிடித்து நான் அதிர்ச்சி அடைந்தேன். என்னையும் என் மகளையும் குடும்பத்தில் ஒருவதாக அவர் வரவேற்றது நடிப்பு என்பதை இப்போது தான் புரிந்து கொண்டேன்.

நான் உழைத்து சம்பாதித்த பணம், சொத்து, ஆவணங்களை மீட்டெடுக்க சட்டப்படி செயல்பட்டு வருகிறேன். எனக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. முதலமைச்சர் மீதும், காவல்துறை மீதும், நீதித்துறை மீதும் எனக்கு நம்பிக்கை உள்ளது. ஆனால் சட்ட நடவடிக்கை இழுத்தடித்து வருவதை காண்கிறேன்.

கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது ராஜபாளையம் தொகுதியின் வளர்ச்சியை பாஜக என்னிடம் கட்சி ஒப்படைத்தது. நானும் ராஜபாளையம் மக்களுக்காக அடிமட்ட அளவில் பாஜகவை வலுப்படுத்த என்னால் முடிந்ததை செய்தேன். அந்த தொகுதியில் போட்டியிட எனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் கடைசி நேரத்தில் எனக்கு டிக்கெட் கிடைக்கவில்லை, இருப்பினும் நான் அதை பொருட்படுத்தாமல் கட்சிக்காக நான் பணி செய்தேன்.25 வருடங்கள் கட்சிக்கு நான் விசுவாசமாக இருந்தும், கட்சியிடம் இருந்து எனக்கு எந்த விதமான ஆதரவும் கிடைக்கவில்லை. கடந்த 40 நாட்களாக அழகப்பன் நீதியை ஏமாற்றி, தலைமறைவாகி இருப்பதை உணர்ந்து நான் உடைந்து போகிறேன்

இன்று என் ராஜினாமா கடிதத்தை நான் மிகுந்த வேதனை வருத்தத்துடன் எழுதினேன். ஆனால் மிகவும் உறுதியான முடிவை எடுத்துள்ளேன். எனக்கும் என் மகளின் எதிர்காலத்துக்கும் ஒரு தனிப் பெண்ணாகவும் ஒற்றை பெற்றோராகவும் நீதிக்காக போராடி வருகிறேன். இவ்வாறு நடிகை கவுதமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.