ஜிவி பிரகாஷ் பட நாயகியின் டுவிட்டர் பக்கம் ஹேக்: பரபரப்பு தகவல்
- IndiaGlitz, [Tuesday,August 18 2020]
நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் நடித்த திரைப்படம் ஒன்றில் நாயகியாக நடித்த நடிகை ஒருவரின் டுவிட்டர் பக்கம் திடீரென ஹேக் செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருக்கும் நடிகைகள் தங்களுடைய சமூக வளைதளத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்து வருகின்றனர் என்பது தெரிந்ததே. அந்த வகையில் நடிகை இஷா ரெபா, தனது டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலை பக்கங்களில் கடந்த சில மாதங்களாக புகைப்படங்களை பதிவு செய்து வந்தார். மேலும் ரசிகர்களின் கேள்விகளுக்கும் அவர் சுவராசியமான பதில்களை அளித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் திடீரென தற்போது நடிகை இஷாவின் டுவிட்டர் கணக்கை மர்ம நபர்கள் ஹேக் செய்து விட்டதாக வெளிவந்துள்ள தகவலால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து நடிகை இஷா ரெபா, டுவிட்டரில் புகார் அளித்துள்ளதாகவும், அவரது டுவிட்டர் கணக்கு மீண்டும் விரைவில் மீட்கப்படும் என்றும் செய்திகள் வெளிவந்துள்ளது.
ஜிவி பிரகாஷ் நாயகனாக நடித்த ’ஆயிரம் ஜென்மங்கள்’ என்ற திரைப்படத்தில் நாயகியாக இஷா ரெபா நடித்துள்ளார் என்பதும் இந்த படம் ரிலீசுக்கு தயாராக இருந்தும் கடந்த சில வருடங்களாக ஒரு சில பிரச்சனை காரணமாக ரிலீசாகாமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில மாதங்களுக்கு முன் நடிகைகள் அனுபமா பரமேஸ்வரன், ஊர்வசி ரவ்தெலா, ஷோபனா உள்ளிட்ட ஒரு சில நடிகைகளின் சமூக வலைதளப் பக்கங்கள் ஹேக் செய்யப்பட்ட நிலையில் தற்போது நடிகை இஷாவின் டுவிட்டரும் ஹேக் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.