சினிமாவில் அறிமுகமாகும் விஷால் பட நாயகியின் மகள்!

  • IndiaGlitz, [Friday,August 27 2021]

நடிகர் விஷால் நடித்த படத்தில் நாயகியாக நடித்த நடிகையின் மகள் சினிமாவில் அறிமுகமாக உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

நடிகர் விஷால் நடிப்பில், இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவான திரைப்படம் ’தாமிரபரணி’. இந்த படத்தில் நாயகியாக நடித்திருந்த பானு அதன் பின் அழகர் மலை, சட்டப்படி குற்றம், பொன்னர் சங்கர் உள்பட ஒருசில தமிழ் படங்களிலும் பல மலையாள படங்களிலும் நடித்தார்.

இந்த நிலையில் நடிகை பானு கடந்த 2015ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட நிலையில் இவருக்கு 2016ஆம் ஆண்டு கியாரா என்ற ஒரு மகள் பிறந்தார். இந்த நிலையில் தற்போது ஐந்து வயதாக இருக்கும் பானுவின் மகள் கியாரா, மலையாள திரைப்படம் ஒன்றில் நடிக்க நடித்து வருகிறார்.

மம்முட்டி நடித்த ’மாமாங்கம்’ உள்பட ஒருசில படங்களை இயக்கிய இயக்குனர் எம் பத்மகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் ’பத்தாம் வளவு’ என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக கியாரா நடித்து உள்ளார். இந்த தகவலை பானு தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே மீனாவின் மகள் நைனிகா, கொட்டாச்சியின் மகள் மானஸ்வி ஆகியோர் குழந்தை நட்சத்திரங்களாக நடித்து வரும் நிலையில் தற்போது பானுவின் மகளும் நடிக்க வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.