நடிகை அஞ்சலிக்குத் திருமணமா? மாப்பிள்ளை குறித்து வெளியான தகவல்!
- IndiaGlitz, [Thursday,March 16 2023]
தமிழ், தெலுங்கு சினிமாவில் முக்கிய நடிகையாக இருந்துவரும் நடிகை அஞ்சலிக்கு விரைவில் திருமணம் நடக்கப் போகிறது எனும் தகவல் தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவரைத் திருமணம் செய்துகொள்ள இருக்கும் மாப்பிள்ளை யார் என்று ரசிகர்கள் ஆர்வத்தோடு கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி பின்னர் இயக்குநர் ராம் இயக்கத்தில் வெளியான “கற்றது தமிழ்” திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களின் மனங்களைக் கொள்ளைக் கொண்டவர் நடிகை அஞ்சலி. இந்தப் படத்தில் தனது சிறப்பான நடிப்புக்காக ஃபிலிம்பேர் விருதினையும் வென்றிருந்தார். பின்னர் “எங்கேயும் எப்போதும்”, “இறைவி”, “தம்பி வெட்டோத்தி சுந்தரம்”, “கலகலப்பு”, “வத்திக்குச்சி” போன்ற படங்களில் தனது தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தார். கூடவே தெலுங்கு சினிமாவிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வந்தார்.
தற்போது 36 வயதாகும் நடிகை அஞ்சலிக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாகத் தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது. இதற்கு முன்பே முன்னணி நடிகர் ஒருவருடன் காதலில் இருக்கிறார் என்பதுபோன்ற கிசுகிசுக்கள் வெளியாகியது. அதையடுத்து பிரபல இயக்குநர் ஒருவரை திருமணம் செய்துகொள்ள இருக்கிறார் என்பதுபோன்ற வதந்திகளும் வெளியாகி இருந்தது. ஆனால் இந்தத் தகவல்களுக்கு அவர் மறுப்புத் தெரிவித்திருந்தார்.
ஆனால் தற்போது நடிகை அஞ்சலிக்கு விரைவில் திருமணம் நடக்கவிருக்கிறது, அவருடைய பெற்றோர்களே மாப்பிள்ளையை முடிவு செய்திருப்பதாகவும் இதற்கு அவர் விருப்பம் தெரிவித்து இருப்பதாகவும் தகவல்கள் கூறப்படுகின்றன. இதுகுறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்றாலும் இந்தத் தகவலுக்கு நடிகை அஞ்சலி மறுப்புத் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் தமிழ், தெலுங்கு எனும் இருமொழி சினிமாவிலும் தொடர்ந்து கவனம் செலுத்திவரும் நடிகை அஞ்சலி தற்போது ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ராம்சரணுடன் இணைந்து “R15” எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.