நடிகை அஞ்சலிக்கு கொரோனா பாதிப்பா? அவரே அளித்த விளக்கம்!

  • IndiaGlitz, [Thursday,April 08 2021]

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதும் குறிப்பாக திரையுலக பிரபலங்கள் பலரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று, பின்னர் குணமடைந்து வருகின்றனர் என்ற செய்தியை அவ்வப்போது பார்த்து வருகிறோம். மேலும் ஒரு சிலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு என்ற வதந்தியும் கிளம்பி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

அந்த வகையில் தமிழ் திரையுலகின் பிரபல நடிகையான அஞ்சலிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு என்றும் இதனை அடுத்து அவர் தன்னைதானே தனிமைப்படுத்தி கொண்டதாகவும் சமூக வலைதளங்களில் ஒரு வதந்தி பரவியுள்ளது. இதனை அடுத்து அஞ்சலி தனது சமூக வலைத்தளத்தில் இதுகுறித்து விளக்கமளித்துள்ளார்.

என்னுடைய நலம் விரும்பிகள், நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புவது என்னவெனில், எனக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ததாகவும் எனக்கு பாசிட்டிவ் ரிசல்ட் வந்ததாகவும் ஒருசில ஊடகங்களில் மற்றும் இணையதளங்களில் செய்திகள் வெளியாகி இருப்பதாக அறிந்தேன். எனக்கு கொரோனா வைரஸ் பாசிட்டிவ் என்பது முழுக்க முழுக்க தவறான தகவல். நான் நலமாகவும் நல்ல உடல்நலத்துடனும் பாதுகாப்பாகவும் இருக்கிறேன். எனக்கு எந்த விதமான பிரச்சனையும் இல்லை என்று விளக்கமளித்துள்ளார். மேலும் அனைவரும் பாதுகாப்பாக இருக்கவும் என்றும் அவர் கூறியுள்ளார்.

நடிகை அஞ்சலியின் இந்த பதிவை அடுத்து அவருக்கு கொரோனா என்று பரவி வரும் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.