பெண் குழந்தையை தத்தெடுத்த நடிகை ரோஜா.. இன்று அவர் என்ன செய்கிறார் தெரியுமா?
- IndiaGlitz, [Monday,November 21 2022]
நடிகை ரோஜா கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு சிறுமியை தத்தெடுத்த நிலையில் இன்று அந்த சிறுமி மருத்துவம் படிப்பதற்காக கல்லூரியில் சேர்ந்து உள்ளார்.
நடிகையும் நகரி தொகுதி எம்எல்ஏவுமான ரோஜாவுக்கு சமீபத்தில் ஆந்திர மாநில அமைச்சரவையில் இடம் கிடைத்தது என்பதும் தற்போது அவர் ஆந்திர மாநில சுற்றுலா மற்றும் இளைஞர்கள் நலன் மேம்பாட்டு துறை அமைச்சராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தனது தொகுதியான நகரி தொகுதியில் கொரோனா வைரஸ் காலத்தில் பல்வேறு உதவிகளை செய்த நடிகை ரோஜா, கொரோனாவால் தாய் தந்தையரை இழந்த சிறுமி ஒருவரை தத்தெடுத்து கொண்டார். அந்த சிறுமியின் பள்ளி, கல்லூரி என கல்விச் செலவு அனைத்தையும் ஏற்றுக் கொள்வதாக அவர் கூறியிருந்தார்.
இந்த நிலையில் தற்போது அந்த சிறுமி பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு நீட் தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்து திருப்பதி பத்மாவதி மகளிர் கல்லூரியில் சேர்ந்து உள்ளார். தற்போது முதலாமாண்டு மருத்துவ படிப்பு படித்து வரும் அவர் மருத்துவ வசதி இல்லாமல் தனது தாய் தந்தையர் இறந்ததைப் போன்று எந்த ஒரு தாய் தந்தையரும் சாகக்கூடாது என்பதற்காக வருங்காலத்தில் இலவசமாக மருத்துவ சிகிச்சை செய்வதே எனது லட்சியம் என்று கூறியுள்ளார்.
இதனை அடுத்து அவரை பாராட்டிய ரோஜா மற்றும் அவரது கணவர் ஆர் கே செல்வமணி சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். ரோஜா வாக்குறுத்தி அளித்தவாரே தான் தத்தெடுத்தவருக்கு மருத்துவ படிப்பு முழுவதற்குமான கட்டணத்தை நடிகை ரோஜா தனது சொந்த செலவில் இருந்து கட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.