என்கவுண்டர் கொண்டாட வேண்டிய விஷயம் கிடையாது. ஆனால்.... பிரபல நடிகை கருத்து
- IndiaGlitz, [Friday,December 06 2019]
என்கவுண்டர் என்பது கொண்டாடப்பட வேண்டிய விஷயம் கிடையாது. ஆனால் இப்படி ஒரு நிலையை கொண்டு வந்தது இந்த சமூகம்தான் என்பதற்காக நாம் வெட்கப்படவேண்டும், வேதனைப் படவேண்டும் என்று நடிகையும் இயக்குனரும் பெண்ணியவாதியுமான லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
என்கவுண்டர் என்பது சட்டப்படி தவறு என்றாலும் ஒரு தாயாக, ஒரு பெண்ணாக, பெண் குழந்தைகள் வைத்திருப்பவராக நான் இதை பார்க்கும் போது உடனடியாக நீதி என்பது இந்த விஷயத்திலாவது கிடைத்ததே என்ற திருப்தி ஏற்பட்டுள்ளது.
நிர்பயா விவகாரத்தில் நடக்காத விஷயம், ராஜலட்சுமி விஷயத்தில் நடக்காத விஷயம், நந்தினி விவகாரத்தில் நடக்காத விஷயம், நீதி இன்னும் கிடைக்காத பல வழக்குகள் இங்கு இருக்கும் நிலையில் இந்த வழக்கில் நீதி உடனடியாக கிடைத்துள்ளது என்பது திருப்தியான ஒன்றுதன். அதனால் இந்த என்கவுண்டரை செய்தவர்கள் ஹீரோவாக தான் எனக்கு தோன்றுகின்றார்கள்
ஒரு பெண்ணாக நான் இதனை வரவேற்கின்றேன், ஆனால் அதே நேரத்தில் ஒரு பொறுப்பான குடிமகளாக பார்க்கும்போது என்கவுண்டர் என்பது நாம் கொண்டாட வேண்டிய விஷயம் கிடையாது. இதில் பல கேள்விகள் எழும்பும். மக்கள் தங்கள் குழந்தைகளை வெளியே விளையாட விட கூட பயப்படுகிறார்கள். அப்படி ஒரு சமுதாயத்தில் நாம் இருக்கிறோம். பெண்களுக்கு எதிரான கொடுமைகள், குற்றம் செய்பவர்களுக்கு 10 வருடம், 15 வருடங்கள் கழித்தும் தண்டனை கிடைக்காத நிலை மாற வேண்டும். நீதிக்காக நீண்டகாலம் காத்திருக்கும் நிலையில் மக்கள் இல்லை என்பதை புரிந்து கொள்ளவேண்டும். சட்டப்படி இந்த விஷயம் விரைவாக நடந்திருந்தால் முழு திருப்தி ஏற்பட்டிருக்கும்’ என்று லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்