தமிழ் நடிகை பாஜகவில் இருந்து நீக்கம்: அண்ணாமலை அதிரடி அறிக்கை!
- IndiaGlitz, [Tuesday,November 22 2022]
தமிழ் திரையுலகின் நடிகை மற்றும் நடன இயக்குனர் காயத்ரி ரகுராம் பாஜகவிலிருந்து நீக்கப்படுவதாக அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் நடிகையும் நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம். அவர் தனது சமூக வலைதளங்களில் பாஜக ஆதரவு கருத்துக்களை ஆவேசமாக தெரிவித்து வந்தார் என்பதும் தன்னைப் பற்றிய விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பாஜகவுக்கு எதிராக காயத்ரி ரகுராம் தனது சமூக வலைத்தளத்தில் சில சர்ச்சையான கருத்தை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவர் காயத்ரி ரகுராம் அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதால் கட்சியில் அவர் வகித்து வந்த அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் ஆறுமாதக் நீக்கப்படுகிறார்.
ஆகவே கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவர்களிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.