இந்த படத்தின் கேரக்டர் எனக்கு கிடைத்த பெருமை: நடிகை அமலா
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை அமலா நீண்ட இடைவெளிக்கு பின் ‘கணம்’ என்ற படத்தில் நாயகன் சர்வானந்திற்கு அம்மாவாக நடித்துள்ளார் என்பதும், இந்த படத்தில் இடம்பெற்ற அம்மா பாடல் சமீபத்தில் வெளிவந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடிக்க முடிந்தது எனக்குக் கிடைத்தப் பெருமை என நடிகை அமலா கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
“மகனுக்கும், அம்மாவுக்கும் இடையிலான அன்பு என்றும் அழியாது என்பதைச் சொல்வதற்காகவே அம்மா பாடல் உருவாக்கப்பட்டது. ஜேக்ஸ் பிஜாயும், பாடகர் சித் ஸ்ரீராமும் உண்மையிலேயே ஒரு மாயாஜாலத்தைச் செய்துள்ளனர்.
முதல் முறை அந்தப் பாடலைக் கேட்ட போது இதமாக, மென்மையாக இருந்தது. இயக்குநர் ஸ்ரீ கார்த்திக், ஒளிப்பதிவாளர் சுஜித் சாரங்க், தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள் என ஒட்டுமொத்தப் படக் குழுவையும் என்னால் உணர முடிந்தது. அந்த உணர்வில் அனைவரும் பிணைந்தனர். பிறகு படப்பிடிப்பின் போது பாடலைத் துண்டு துண்டாகத்தான் கேட்டோம்.
தற்போது பாடல் வெளியான பிறகு, பாடலை முழுமையாகக் கேட்க முடிந்தது. அதை என் இதயத்தில் உணர முடிந்தது. டைரக்டர் ஸ்ரீகார்த்திக்குக்கு தனது அம்மாவின் மீதிருக்கும் அன்பின் காரணமாகவே இந்தப் படம் உருவானது. இந்தப் பாடல் அந்த அன்பைப் பற்றியது. கண்டிப்பாக உங்களாலும் உணர முடியும் என்று நான் கூறுவேன்.
அதீத திறமை, நெறிகள், நம்பிக்கை, அன்பு என எல்லாம் சேர்ந்து வருவதற்கான புள்ளி இது என்பது மிகவும் அழகாகத் தெரிகிறது. ‘கணம்’ படத்தில் அந்த அம்மா கதாபாத்திரத்தில் நடிக்க முடிந்தது எனக்குக் கிடைத்தப் பெருமையாக உணர்கிறேன். நான் நிஜ வாழ்க்கையிலும் ஒரு தாய் தான். அந்த நிலையை நான் பொக்கிஷமாகக் கருதுகிறேன். நான் படத்தை முடிக்கும் வரை, எல்லோருக்கும் அம்மாவாகவே இருந்தேன். அது மிகவும் மதிப்புமிக்க விஷயம். அதை நான் என்றும் மறக்க மாட்டேன்.
எஸ்.ஆர்.பிரபு மற்றும் ட்ரீம் வாரிய பிக்சர்ஸ் போன்ற அற்புதமான தயாரிப்பாளர் கிடைத்தது டைரக்டர் ஶ்ரீகார்த்திக்கின் அதிர்ஷ்டம். ஏனென்றால் அவர்கள் படத்தையும், ஶ்ரீகார்த்திக்கையும் முழுமையாக நம்புகிறார்கள். பட உருவாக்கத்தில் நாங்கள் ரசித்ததைப் போல படம் பார்க்கும் போது நீங்களும் ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.
அறிமுக இயக்குநர் ஸ்ரீகார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கணம்’ படத்தில் அமலா அக்கினேனி, சர்வானாந்த், நாசர், ரீத்து வர்மா, சதீஷ், ரமேஷ் திலக், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக சுஜித் சராங், இசையமைப்பாளராக ஜேக்ஸ் பிஜாய், எடிட்டராக ஸ்ரீஜித் சராங், கலை இயக்குநராக சதீஷ்குமார் உள்ளிட்டோர் பணிபுரிந்துள்ளனர்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் இந்தப் படம் தயாரித்துள்ளது. தெலுங்கில் ‘ஒகே ஒக ஜீவிதம்’ என்ற பெயரில் இந்தப் படம் உருவாகியுள்ளது. தெலுங்கில் சதீஷ் மற்றும் ரமேஷ் திலக் ஆகியோருக்கு பதிலாக வெண்ணிலா கிஷோர் மற்று ப்ரியதர்ஷி ஆகியோர் நடித்துள்ளனர்.இரு மொழிகளில் உருவாகி வரும் ‘கணம்’ – ‘ஒகே ஒக ஜீவிதம்’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com