வரி ஏய்ப்பு விவகாரம் நடிகை அமலாபால் கைதாகி விடுதலை

  • IndiaGlitz, [Monday,January 29 2018]

சொகுசு கார் வரி ஏய்ப்பு விவகாரத்தில் நடிகை அமலாபால், கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

கேரளாவை இருப்பிடமாக கொண்ட அமலாபால், சொகுசுக்கார் ஒன்றை வாங்கும்போது கேரளாவில் பதிவு செய்யாமல், வரி ஏய்ப்பு செய்ய புதுச்சேரியில் பதிவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் அவர் சுமார் ரூ.20 லட்சம் வரி ஏய்ப்பு செய்ததாக அவர் மீது கேரள பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து இதுகுறித்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று மாலை கொச்சியில் உள்ள குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று அமலாபாலுக்கு சம்மன் அனுப்பட்டிருந்தது. இதன்படி ஆஜரான அமலாபாலை கேரள போலீசார் கைது செய்ததாகவும் பின்னர், கேரள உயர்நீதிமன்றம் அளித்த முன்ஜாமினை அடிப்படையாக கொண்டு அவர்கள் உடனே விடுதலை செய்ததாகவும் கேரள போலீசாரிடம் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.

ஏற்கனவே இதே போன்ற வழக்கில் மலையாள நடிகர்கள் சுரேஷ்கோபி, பஹத் பாசில் ஆகியோரும் கைதாகி விடுதலை செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.