'அழகி' நடிகையின் மறுப்பு அறிவிப்பு

  • IndiaGlitz, [Friday,July 08 2016]

தங்கர்பச்சான் இயக்கிய 'அழகி' உள்பட பல படங்களில் நடித்த பிரபல நடிகை நந்திதாதாஸ் நீண்ட இடைவெளிக்கு பின்னர் பெண் இயக்குனர் குட்டிரேவதி இயக்கவுள்ள ஒரு படத்தில் சமுத்திரக்கனியுடன் நடிக்கவுள்ளதாக கடந்த இரண்டு நாட்களாக செய்திகள் பரவி வந்தன.
இந்நிலையில் நந்திதாதாஸ், இந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்த்துள்ளார். தற்போது தனது மகனுடன் விடுமுறையை கழித்து வருவதாகவும், விடுமுறை முடிந்த பின்னர் தான் தற்போது நடித்து கொண்டிருக்கும் 'Manto' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளதாகவும், தமிழ்ப்படம் உள்பட வேறு எந்த படத்திலும் நடிக்க இதுவரை ஒப்பந்தம் ஆகவில்லை என்றும் கூறிய நந்திதாதாஸ், நான் தமிழில் நடிக்கவுள்ளதாக வெளிவந்த செய்தி முழுக்க முழுக்க வதந்தியே என்றும் அவர் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
நந்திதாதாஸ் மறுப்பு தெரிவித்ததை அடுத்து இந்த படத்தின் நாயகி யார் என்ற விபரம் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மரியான், மாயா படங்களில் பாடல்களை எழுதிய கவிஞர் குட்டிரேவதி 'மரியான்' படத்தின் திரைக்கதை குழுவிலும் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.