நட்சத்திர ஓட்டலில் நடிகர்கள் பேசியது என்ன?

  • IndiaGlitz, [Sunday,April 22 2018]

தயாரிப்பாளர்களின் செலவுகளை குறைக்க நடிகர்கள் செய்ய வேண்டியது என்ன என்பது குறித்து நேற்று சென்னை அண்ணா சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் கூட்டம் ஒன்று நடந்தது. இந்த கூட்டத்தில் நடிகர்களின் சம்பளம், அவர்கள் நடிக்கும் படங்களின் வசூலை பொருத்து முடிவு செய்ய வேண்டும் என்பதற்காக கூடியதாக கூறப்பட்டது.

உண்மையில் ஒரு படத்தின் பட்ஜெட் எகிறுவதற்கு காரணமே முன்னணி நடிகர்களின் சம்பளமே காரணம். எனவே அவர்களுடைய சம்பளத்தை நிர்ணயம் செய்ய கூடிய இந்த கூட்டத்தில் முன்னணி நடிகர்கள் பலர் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய நிலையில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களாக ரஜினி, கமல், அஜித், விஜய், விக்ரம் ஆகியோர் உள்ள நிலையில் இவர்கள் யாரும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் நேற்றைய கூட்டத்தில் பேசப்பட்ட விஷயங்களை தயாரிப்பாளர் சங்கம் மூலம் அனைத்து நடிகர்களுக்கும் தெரியப்படுத்தப்படும் என கூறப்படுகிறது.

மேலும் நடிகர்களின் சம்பளம் மட்டுமின்றி நடிகர்களின் உதவியாளர்கள் மற்றும் நடிகைகளின் உதவியாளர்களின் சம்பளத்தையும் அந்தந்த நடிகர், நடிகைகளே ஏற்கவேண்டும் என்பது குறித்தும் பேசப்பட்டது. ஏற்கனவே சூர்யா, விஷால், கார்த்தி உள்ளிட்டோர் தங்களுடைய உதவியாளர்கள் சம்பளத்தை தாங்களே ஏற்று கொள்வதாக கூறியுள்ள நிலையில், இதேபோன்று மற்ற நடிகர், நடிகைகளும் ஏற்று கொள்ள வேண்டும் என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

மொத்தத்தில் முதல்முறையாக நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் மற்றும் பெப்சி யூனியன் ஆகியோர் ஒரே பாதையில் ஒருமித்த கருத்துக்களுடன் பயணிப்பதால் தமிழ் திரையுலகம் ஆரோக்கியமான பாதையை நோக்கி செல்கிறது என்பது மட்டும் உறுதியாக தெரிகிறாது.