காவிரி தாயுடன் பிரபல நடிகர் உரையாடிய கவிதை
- IndiaGlitz, [Wednesday,April 11 2018]
காவிரி தண்ணீர் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக 25 ஆண்டுகால சட்டப்போராட்டத்திற்கு பின் கிடைத்த தீர்ப்பையும் மத்திய அரசு அமல்படுத்தவில்லை என்பதை கண்டித்து கடந்த சில நாட்களாக தமிழக மக்கள் தெருவுக்கு வந்து போராடி வருகின்றனர். காவிரி தண்ணீர் இல்லையென்றால் விவசாயிகள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும் என்றும், தமிழக மக்களின் குடிநீர்த்தேவைக்கு பற்றாக்குறை ஏற்படும் என்பதால் இந்த போராட்டம் நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது. இந்த நிலையில் காவிரி தாயுடன் உரையாடுவது போன்று நடிகர் விவேக் ஒரு கவிதை எழுதி அதனை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். அந்த கவிதை இதோ:
நான்: காவிரித் தாயே! காவிரி தாயே!
கன்னட மண்ணில் பூ விரித்தாயே! - ஏன்
தமிழ்மகன் கேட்டால் கை விரித்தாயே?
காவிரி: முத்து மகனே! முட்டாள் மகனே!
கைவிட்டது நானா நீயா?;
செழித்துப் பாய்ந்தேன்; நீ சேமித்தாயா?
ஆழியில் கலக்கும்முன் அணை செய்தாயா?
நான்: இனி நான் என்ன செய்ய? சொல்வாயா?
காவிரி: சினிமா பார்த்து சிரி
கிரிக்கட், பாப்கார்ன் கொறி!
மழுங்கி போனதே உன் வெறி
நான்: தாயே என்னை மன்னிப்பாயா?
காவிரி: எழுந்து நில்! தயக்கம் கொல்!
இரைப்பை நிரப்புவது கலப்பை!
இதை உணராதவன் வெறும் தோல் பை
நான் உனக்கும் அன்னை
கன்னடர் உந்தன் உடன் பிறப்பு
காவிரியும் உனது நீர்ப் பரப்பு
இதை உரக்கச் சொல்; உன் உரிமை சொல்