கமல்ஹாசனின் இந்து தீவிரவாதம்' பேச்சுக்கு அஜித் பட நடிகர் பதிலடி!

  • IndiaGlitz, [Monday,May 13 2019]

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்றும், அவர்தான் நாதுராம் கோட்சே என்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் பேசினார். இஸ்லாமியர்கள் அதிகம் இருக்கும் பகுதியில் அவர்களுடைய வாக்குகளை கவரவே கமல் இவ்வாறு சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பலர் அவருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பிரபல பாலிவுட் நடிகரும், அஜித் நடித்த 'விவேகம்' படத்தின் வில்லன் நடிகருமான விவேக் ஓபராய், கமல்ஹாசனின் இந்த பேச்சு குறித்து குறிப்பிடும்போது, 'கமல் அவர்களே! நீங்கள் ஒரு மிகப்பெரிய கலைஞன். கலைக்கு எவ்வாறு மதம் கிடையாதோ, அதேபோல் தீவிரவாதத்திற்கும் மதம் கிடையாது. நீங்கள் கோட்சேவை தீவிரவாதி என்று கூறலாம், ஆனால் அவர் ஒரு இந்து என நீங்கள் குறிப்பிட வேண்டிய அவசியம் என்ன? அதுவும் வாக்குகளுக்காக இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள பகுதியில் பேசியது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

கோட்சேவுக்கு பின் இந்தியாவிலும் உலக நாடுகளிலும் பல தீவிரவாத தாக்குதல்கள் நடந்துள்ளது. ஆனால் அந்த தீவிரவாத சம்பவங்களை எல்லாம் மதத்துடன் சம்பந்தப்படுத்தி பேசாத கமல்ஹாசன், கோட்சே செய்த கொலையை மட்டும் இந்து மதத்துடன் சம்பந்தப்படுத்தி பேசியதற்கு சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.