எம்.எல்.ஏ பதவியேற்ற தினகரனிடம் விஷால் வைத்த முதல் கோரிக்கை
- IndiaGlitz, [Friday,December 29 2017]
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அமோக வெற்றி பெற்ற தினகரன் இன்று தலைமைச்செயலகத்தில் எம்.எல்.ஏவாக பதவியேற்றுக்கொண்டார். ஆர்.கே.நகர் எம்.எல்.ஏவாக பதவியேற்ற தினகரனுக்கு முதல் கோரிக்கை விஷாலிடம் இருந்து வந்துள்ளது. ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ தினகரனிடம் அறிக்கை ஒன்றின் மூலம் விஷால் தனது கோரிக்கையை தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முதியோர் ஓய்வூதிய திட்டத்துக்கு மிக முக்கியத்துவம் அளித்தார். 2011ல் அவர் ஆட்சியமைத்த போது 500 ரூபாயாக இருந்த முதியோர் உதவித் தொகை, 1000 ரூபாயாக உயர்த்தினார்.
தமிழகம் முழுக்க 21 லட்சம் முதியோர்கள் தலா ரூ.1000 பெறுவதை உறுதி செய்தார். 4 ஆயிரத்து 600 கோடி ரூபாய் இந்த திட்டத்துக்காக ஒதுக்கப்பட்டது. ஆனால் அவரின் மறைவுக்கு பின்னர் இந்த திட்டம் சரியாக செயல்படுத்தப்படாததால், பயனடைந்து வந்த முதியோர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வயதான காலத்தில் உதவித் தொகை கேட்டு தாசில்தார் அலுவலகத்தில் அலைந்து திரிகின்றனர்
இந்த நிலை ஆர்.கே நகர் தொகுதியிலும் நிலவுவதால் அவர்களுக்கான முதியோர் உதவித்தொகை சரிவர சென்று சேர்கின்றதா? என்பதை புதிதாக எம்.எல்.ஏ வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டிடிவி தினகரனாகிய நீங்கள் கண்காணிக்க வேண்டும் என்ற கோரிக்கையை உங்கள் முன் வைக்கின்றேன்' என்று விஷால் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.