தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது: நடிகர் வரதராஜனின் புதிய வீடியோ
- IndiaGlitz, [Monday,June 08 2020]
நடிகரும் செய்தி வாசிப்பாளருமான வரதராஜன் தனது முகநூல் பக்கத்தில் நேற்று வெளியிட்ட வீடியோ ஒன்றில் தனது நண்பர் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டிருந்தால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் ஆனால் பல மருத்துவமனைகளில் இடமில்லை என்று திருப்பி அனுப்பி விட்டதாகவும் எனவே பொதுமக்கள் கொரோனாவால் பாதிக்கப்படாத வகையில் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும் ஒருவேளை கொரோனாவால் பாதிக்கப்பட்டால் சென்னையில் எந்த மருத்துவமனையிலும் இடமில்லை என்றும் கூறியிருந்தார்
இந்த வீடியோ உலகம் முழுவதும் வைரல் ஆன நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர் இதுகுறித்துக் கூறுகையில் ’சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் படுக்கை வசதி அதிகமாக இருப்பதாகவும் வரதராஜன் தவறான தகவலை அளித்துள்ளதாகவும் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியிருந்தார்
இந்த நிலையில் தற்போது நடிகர் வரதராஜன் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியபோது ’நேற்று தான் வெளியிட்ட வீடியோ தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு மட்டும் அனுப்பப்பட்டது என்றும் அந்த வீடியோ எப்படி வைரல் ஆனது என்பது ஆச்சரியமாக இருக்கிறது என்றும் கூறினார்
மேலும் தனது நண்பர் ஒரு சில மருத்துவமனைகளில் இடமில்லை என்று கூறப்பட்டது உண்மைதான் என்றும் ஆனால் அதன் பின்னர் ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது அவர் தேறி வருவதாகவும் விரைவில் அவர் வீடு திரும்புவார் என்று நம்புவதாகவும் தெரிவித்தார்
மேலும் கொரோனா வைரஸ்க்கு எதிரான நடவடிக்கையில் தமிழக அரசு மற்றும் மத்திய அரசு மிகச்சிறப்பாக செயல்படுகிறது என்றும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் தினந்தோறும் கூட்டம் போட்டு கொரோனாவை தடுப்பதில் முழுமூச்சாக ஈடுபட்டு வருகிறார்கள் என்றும் கூறினார். மேலும் மக்கள் அனைவரும் அரசு அறிவிக்கும் வழிமுறைகளை கடைப்பிடித்து பத்திரமாக இருக்க வேண்டியும் அவர் அறிவுரை கூறினார். இந்த வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது