சூர்யா உள்நோக்கத்துடன் பேசியிருக்க மாட்டார்: ஓய்வுபெற்ற நீதிபதி கருத்து
- IndiaGlitz, [Monday,September 14 2020]
நீட் தேர்வு குறித்து அதனால் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்தும் நேற்று சூர்யா தனது சமூக வலைத்தளத்தில் காரசாரமான ஒரு அறிக்கையை வெளியிட்டார். இந்த அறிக்கை மாணவர்கள் பெற்றோர்கள் மத்தியிலும், தமிழக அரசியல் வட்டாரத்திலும், நீதிமன்ற வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் சூர்யா தனது அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளதாகவும், அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் நீதிபதி எம்.எஸ்.சுப்பிரமணியம் என்பவர் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியதாகவும் செய்திகள் வெளிவந்தது.
இந்த நிலையில் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கேஎன் பாட்ஷா அவர்கள் இது குறித்து கூறிய போது ’நடிகர் சூர்யா உள்நோக்கத்துடன் பேசியிருக்க மாட்டார் என்றும் அவர் தொண்டு மற்றும் கல்வி சேவைக்காக அறியப்பட்டவர் என்றும், எனவே நீதிமன்ற அவமதிப்பு தொடராமல் பெருந்தன்மையுடன் விட்டு விடலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் தினமும் அதிக கூட்டத்துடன் இருக்கும் நீதிமன்றத்தையும் ஒரே ஒரு நாள் நடைபெறும் நீட் தேர்வையும் ஒப்பிடுவது தவறு என்றும் அவர் கூறியுள்ளார்.