சீமைக்கருவேல மரம் போன்றது திருட்டு சிடிக்கள். சூர்யா
- IndiaGlitz, [Tuesday,February 07 2017]
இயக்குனர் ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த 'சி 3' திரைப்படம் நாளை மறுநாள் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்திற்கு சூர்யா முக்கிய நகரங்களுக்கு சென்று புரமோஷன் செய்து வருகிறார்.
அந்த வகையில் அவர் இன்று நெல்லையில் உள்ள ஒரு திரையரங்கில் நடைபெற்ற 'சி 3' பட புரமோஷனில் கலந்து கொண்டார். இந்த விழாவில் அவர் பேசியபோது சீமைக்கருவேல மரங்களை அகற்றுவது போல திருட்டு சிடிக்களையும் இளைஞர்கள் அகற்ற வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.
இந்த விழாவில் சூர்யா மேலும் கூறியதாவது:
நான் எத்தனையோ படங்களில் நடித்தாலும் சிங்கம் படத்தின் துரைசிங்கம் கேரக்டர் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. அதற்கு காரணம் இந்த மண்தான். நெல்லை மக்கள் கடுமையான உழைப்பாளிகள். அவர்களது வாழ்க்கையைத்தான் 'சிங்கம்' படத்தில் காட்டியுள்ளோம்.
தற்போது தமிழகம் முழுவதும் சீமை கருவேல மரங்களை அகற்றும் பணி நடந்து வருகிறது. அந்த பணியில் மாணவர்களும் ஈடுபடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. கருவேல மரங்களின் வேர்கள் நிலத்திற்குள் 20 அடி வரை சென்று நீரை உறிஞ்சுகிறது. அதனால் கருவேல மரங்களை வேருடன் அகற்ற வேண்டும். கருவேல மரங்களின் வேர் போன்று திரைத்துறையிலும் திருட்டு சி.டி.க்கள் உள்ளன. அவற்றை ரசிகர்கள் தான் அகற்ற வேண்டும்.
'சிங்கம்' படத்தின் முதல் இரண்டு பாகங்களை போல் சிங்கம்-3வது பாகத்திலும் காவல்துறையை பெருமை படுத்தியுள்ளோம். இந்த படம் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும். எனவே அனைவரும் தியேட்டருக்கு வந்து படத்தை பாருங்கள்
இவ்வாறு சூர்யா கூறினார்.