நிஜத்திலும் ஹீரோ....! சூர்யா செய்த தரமான ,சிறப்பான அரசியல் சம்பவங்கள்....!
- IndiaGlitz, [Friday,July 23 2021]
நடிகர் சூர்யாவின் 46-ஆவது பிறந்தநாள் இன்று, காலை முதலே அவரது பிறந்தநாளை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். திரையுலக பிரபலங்கள் உட்பட பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்தவகையில் சூர்யா இதுவரை பேசிய பரபரப்பான அரசியல் சம்பவங்கள் குறித்து இத்தொகுப்பில் காண்போம்.
வெரட்டி வெளுக்கணும் அவன...!
கடந்த 2018-இல் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் தான் தான சேர்ந்த கூட்டம். இப்படத்தில் அனிருத் இசையமைப்பில், அந்தோணி தாசன் குரலில் வெளியான சொடுக்கு மேல சொடக்கு போடுது பாடல் மாபெரும் ஹிட் என்று சொல்லலாம். அதிலும் குறிப்பாக வெரட்டி வெரட்டி வெளுக்க தோணுது அதிகாரத் திமிர, பணக்காரப்பவர, தூக்கி போட்டு மிதிக்க தோணுது என்ற விக்னேஷ் சிவனின் வரிகள், தாறுமாறாக இருந்தது. அதைப்போலவே அரசியல்வாதிகள் சிலரை சூர்யா ஓட விரட்டுவது போல காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். எந்த கட்சியும் பெரிதாக நினைக்காத நிலையில், அதிமுக இதை நீதிமன்றம் வரை கொண்டுசென்று சர்ச்சையை கிளப்பியது.
கல்விக் கொள்கைக்கு எதிராக குரல்.....!
கடந்த 2019-ஆம் ஆண்டு அகரம் பவுண்டேசன் சார்பாக விழா ஒன்று நடைபெற்றது. அதில் பேசிய சூர்யா ஒன்றிய அரசு அறிமுகப்படுத்திய, புதிய கல்விக் கொள்கைக்கு எதிராகவும், நீட் தேர்வு குறித்தும் நியாயமான கருத்துக்களை, கடுமையாக பேசியிருந்தார். ஒரு சித்தாந்தம் நமக்கு எதிரியாக இருக்கும் என்று சூர்யா பேசியது, அரசியலில் பெரும் சர்ச்சை மற்றும் பரபரப்பை கிளப்பியது.
மோடிக்கு கேட்டதாக கூறிய ரஜினி......!
காப்பான் வெளியீட்டு விழாவில் கவிஞர் கபிலன் கூறியிருப்பதாவது, சூர்யா பேசியதை, ரஜினி பேசியிருந்தால், இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்று கூறியிருந்தார். இவருக்கு பின் பேசிய ரஜினி சூர்யா பேசிய குரல் மோடிக்கே கேட்டுவிட்டது என்று அவரை பாராட்டியிருந்தார்.
OTT கலாசரத்தை துவங்கியவர்....!
ஜோதிகா நடிப்பில், அறிமுக இயக்குனர் Fedrick இயக்கத்தில், உருவாகியிருந்த பொன்மகள் வந்தாள் படத்தை சூர்யா தான் தயாரித்திருந்தார். இந்த திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிடாமல், நேராக OTT-யில் வெளியிட முடிவு செய்தார். பிரபல நடிகர்களின் படங்கள் இணையத்தில் வெளியாவது புதிய கலாச்சாரமாக இருந்த நிலையில், சூர்யா இதை தைரியமாக முன்னெடுத்தார். இதனால் திரையரங்கு உரிமையாளர்கள் அவரது குடும்பத்தினர் நடித்த எந்த திரைப்படத்தையும், திரையரங்குகளில் வெளியிடப்போவதில்லை என்று அறிவித்தனர். இப்பிரச்சனை பூதாகரமாக வெடிக்க, அனைத்து எதிர்ப்பையும் மீறி முதலாக ஓடிடி-யில் வெளியிட்டார்.
தஞ்சை கோவில் சர்ச்சை....!
சென்ற 2020-ஆம் ஆண்டு ராட்சசி படத்திற்காக, விருது வாங்கினார் ஜோதிகா. அந்த மேடையில் ஜோ பேசியதாவது, கோயில்களை பராமரிக்க நாம் அனைவரும் செலவிடுகிறோம். நம் ஊரில் மருத்துவமனைகள் பராமரிப்பு இல்லாமல் இருக்கிறது, அதைப்போலவே இதற்கும் பணஉதவி கொடுத்து அனைவரும் உதவுங்கள் என்று கூறியிருந்தார். இவர் சாதரணமாக பேசிய விஷயத்தை, பல முட்டாள்கள் புரிந்து கொள்ளாமல் சர்ச்சையை கிளப்பி விட்டனர். இதனால் பலரும் சூர்யா குடும்பத்தை கடுமையாக விமர்சித்தனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தங்களது கருத்தில் எந்த குற்றமும் இல்லை, அதனால் மன்னிப்பு கேட்கப் போவதில்லை என அறிக்கை ஒன்றை சூர்யா வெளியிட்டு இருந்தார். இதேபோல் தஞ்சை அரசு மருத்துவமனைக்கு ரூ.25 லட்சம் நிதியுதவியும் கொடுத்து, சர்ச்சை பேசுபவர்கள் வாயை அடைத்தார்.
ரசிகர்களுக்கு அறிவுரை....!
மீரா மிதுன் சூர்யாவை பற்றி தரக்குறைவாகவும், ஆபாசமாகவும் பேசியிருந்தாள். இதற்கு இயக்குனர் பாரதிராஜா, நடிகர் விவேக் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து, சூர்யாவிற்கு ஆதரவாக குரல் எழுப்பினர். இதற்கு பதிலளித்த சூர்யா ரசிகர்கள் நேரத்தை வீணாக்க வேண்டாம் என நாகரிகமாக அறிக்கை வெளியிட்டு இருந்தார்.
சுரரைப்போற்று OTT சர்ச்சை.....!
இயக்குனர் சுதா கொங்கரா இயக்ககத்தில் வெளியான, சூரரைப்போற்று படத்தை ஓடீடீ வெளியிட சூர்யா முடிவு செய்தார். இது ரசிகர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதற்கு பதிலளித்த சூர்யா திரைப்படத்தின் வர்த்தகத்தில் இருந்து, 5 கோடி தேவைப்படுவோருக்கு வழங்க இருக்கிறோம் என்று நியாயமான அறிக்கையை வெளியிட்டு இருந்தார். இதைப்போலவே தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகர் சங்கத்திற்கு லாபத்தில் கிடைத்த தொகையை வழங்கினார்.
நீட் குறித்து விமர்சனம்....!
ஏகலைவனின் கட்டைவிரல், நீட் என்பது மனு நீதி தேர்வு போன்றது உள்ளிட்ட காரசாரமான விமர்சனங்களை முன்வைத்தார். இது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது, இதனால் சூர்யாவை பலரும் அரசியலுக்கு வரவேண்டும் என கூறியிருந்தனர். ஆனால் சூர்யா சாதாரண குடிமகனாக வாழ்வதையே விரும்புவதாக பலமுறை கூறியுள்ளார்.
ஒன்றிய அரசின் திட்டங்களுக்கு எதிராக முதலில் குரல் கொடுத்தவர் சூர்யா.....!
வேளாண் திருத்தச்சட்டம், நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கை, ஒளிப்பதிவாளர் சீர்திருத்த சட்டம் உள்ளிட்ட ஒன்றிய திட்டங்களுக்கு, கடுமையான அளவில் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இதனால் பாஜக பிரமுகர்களுக்கும், சூர்யா ரசிகர்களுக்கும் இடையே இணைய போரே நடந்தது என்று சொல்லலாம். மக்களின் குரலாகவே இருந்து பேசுபவர் சூர்யா, பொதுமக்கள், நியாயமான கருத்துக்களை முன்வைப்பவர்கள், திரைத்துறை பிரமுகர்கள் , அரசியல் தலைவர்கள் பெரும்பாலும் சூர்யா கருத்திற்கே ஆதரவு தெரிவிப்பார்கள்.
சூர்யா சமூகத்திற்கு இன்னும் பல கருத்துக்களை கூற வேண்டும் என்றும், பலருக்கும் உதவ வேண்டும், அவர் பல்லாண்டு வாழ வேண்டும் என்று பலரும் அவரை மனதார வாழ்த்தி வருகிறார்கள்.