கொரோனாவால் பெற்றோரை இழந்து அனாதையாக தவிக்கும் குழந்தைகளுக்கு… இளம் நடிகர் செய்த காரியம்!

  • IndiaGlitz, [Thursday,May 06 2021]

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முக்கியக் காதாபாத்திரங்களில் நடித்து தற்போது கதாநாயகனாக உருவெடுத்து இருப்பவர் சந்தீப் கிஷன். இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு உதவத் தயார் என அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றினால் பல ஆயிரக்கணக்கான குழந்தைகள் அனாதைகளாகவும் கவனிக்க ஆளின்றியும் தவித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதிலும் கொல்கத்தாவில் தாய், தந்தை, தாத்தா, பாட்டி என ஒட்டுமொத்த குடும்பத்தையும் இழந்து தவிக்கும் ஒரு பச்சிளம் குழந்தையை யார் எடுத்துச் செல்வது என்பது குறித்து ஒரு பெருத்த விவாதமே நடைபெற்றது. இப்படி இந்தியா முழுக்கவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரைவிட்ட பெற்றோர்களின் இளம் குழந்தைகளின் நிலை என்ன என்பது தற்போது கேள்விக்குறியாகி இருக்கிறது.

இப்படியான குழந்தைகளுக்கு உதவிக்கரம் நீட்ட முன்வந்துள்ளார் இளம் நடிகர் சந்தீப் கிஷன். இதுகுறித்து அவர் தனது டிவிட்டரில் வெளியிட்டு உள்ள பதிவில், “இந்த சவாலான காலங்களில் கொரோனா காரணமாக துருதிஷ்வசமாக குடும்பங்களை இழந்த ஏதேனும் குழந்தைகளைப் பற்றி உங்களுக்குத் தெரிந்தால் தயவு செய்து கீழே குறிப்பிடப்பட்டுள்ள மின்னஞ்சல் ஐடிக்கு தகவல்களை அனுப்புங்கள். நானும் எனது குழுவும் எங்கள் சக்திக்கு தகுந்த அளவு எங்களால் முடிந்த அளவு அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குப் பல குழந்தைகளின் உணவு மற்றும் கல்வி உட்பட சில செலவுகளை ஏற்றுக்கொள்கிறோம்” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

தெலுங்கு நடிகரான சந்தீப் கிஷன் தமிழ் சினிமாவில் “வாரணம் ஆயிரம்” திரைப்படம் எடுக்கப்பட்டபோது இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனிடம் உதவி இயக்குநராக பணியாற்றி உள்ளார். அதேபோல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான “மாநகரம்” திரைப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் “கசடதபற”, “கண்ணாடி’‘ போன்ற படங்களில் நடித்த இவர் “மாயவன்“ திரைப்படத்தில் கதாநாயகனாவும் நடித்துள்ளார்.

தற்போது தெலுங்கில் கவனிக்கப்படும் நடிகராக வலம் வரும் இவர் கொரோனா நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பெற்றோர்களின் பிஞ்சு குழந்தைகளுக்கு உதவ முன்வந்துள்ளார். இந்த முயற்சிக்கு அவரது ரசிகர்கள் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.