கொரோனா லாக்டவுன்: வருமானம் இல்லாததால் மீன் வியாபாரியான நடிகர்
- IndiaGlitz, [Friday,July 03 2020]
கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக படப்பிடிப்பு முடங்கியிருப்பதால் பெரிய நடிகர்களுக்கு எந்தவிதமான பிரச்சனையும் இல்லை என்றாலும் சிறிய நடிகர்கள் மற்றும் அன்றாடம் வருமானம் பெற்ற திரையுலகைச் சேர்ந்தவர்கள் பெரும் சிக்கலில் உள்ளனர்.
100 நாட்களுக்கும் மேலாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக பல நடிகர் நடிகைகள் வருமானம் இன்றி வேறு தொழிலுக்குச் சென்று விட்டனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் நடித்த நடிகர் சுஜித் அஞ்சேரி தற்போது மீன் வியாபாரி ஆக மாறியுள்ளார்
சினிமாவில் சேர்வதற்கு முன்னர் மீன் சந்தையில் வேலை பார்த்ததாகவும், அந்த அனுபவத்தை வைத்து தற்போது மீன் வியாபாரம் செய்து வருவதாகவும், ஊரடங்கால் சினிமாவில் வருமானத்தை இழந்ததால் வேறு வழியில்லாமல் மீண்டும் பழைய வேலைக்கு வந்து விட்டதாகவும் படப்பிடிப்புகள் தொடங்கும்வரை மீன் வியாபாரம் செய்ய முடிவு செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஏற்கனவே பாலிவுட் நடிகர் சோலங்கி திவாகர் என்பவர் டெல்லியில் தள்ளுவண்டியில் பழ வியாபாரம் செய்து வருகிறார் என்பதும் தமிழ் இயக்குனர் ஆனந்த் என்பவர் சென்னை முகலிவாக்கத்தில் மளிகை கடை வைத்துள்ளார் என்பதும் நடிகர் ரோஹன் பட்னேகர் என்பவர் கருவாடு விற்பனை செய்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது