ஆதரவற்ற குழந்தைகளுடன் பொங்கல் கொண்டாடிய பிரபல காமெடி நடிகர்.. வைரல் செல்பி!!!

  • IndiaGlitz, [Monday,January 18 2021]

தமிழ்த் திரைப்படங்களில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூரி. இவர் தற்போது பிரபல இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் கதாநாயகனாவும் நடித்து வருகிறார். இவர் மதுரையில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கான ஒரு இல்லத்தில் பொங்கல் விழாவை கொண்டாடி உள்ளார். அப்போது குழந்தைகளுடன் எடுத்துக் கொண்ட செல்பி இணையத்தில் வைரலாகி வருகிறது.

கடச்சனேந்தல் பகுதியில் அமைந்துள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கான இல்லத்தில் நடிகர் சூரி பொங்கல் விழாவை சிறப்பித்து உள்ளார். மேலும் குழந்தைகளுக்குத் தேவையான நோட், பள்ளி எடுத்துச் செல்லும் பேக், உண்டியல் போன்ற அத்யாவசிய பொருட்களையும் அவர் பரிசளித்தார். மேலும் நூற்றுக்கணக்கான குழந்தைகளுடன் சேர்ந்து பாட்டுப் பாடி நடனம் ஆடி அவர்களையும் மகிழ்வித்து உள்ளார்.

அப்போது குழந்தைகளுடன் உரையாடிய நடிகர் சூரி, நீங்கள் எல்லோரும் படித்து நல்ல நிலைமைக்கு வரவேண்டும் என்று தனது யதார்த்தமான பேச்சால் அவர்களுக்கு அறிவுரையும் கூறினார். பொங்கல் விழாவை ஒட்டி நடிகர் சூரி செய்த இந்தச் செயல் பலரது பாராட்டையும் பெற்றிருக்கிறது. மேலும் அங்கிருந்த குழந்தைகள் அனைவரும் மகிழ்ச்சி பொங்க இருந்ததையும் புகைப்படத்தில் நம்மால் பார்க்க முடிகிறது.