பொய் சொன்னால் அறை நிச்சயம்… நடிகர் சித்தார்த்தின் இந்த எச்சரிக்கை யாருக்கு?
- IndiaGlitz, [Wednesday,April 28 2021]
கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாம் அலையால் இந்தியாவே திண்டாடி வருகிறது. இந்நிலையில் மருத்துவமனைகளில் காணப்படும் இடப்பற்றாக்குறை, ஆக்சிஜன் பற்றாக்குறை போன்றவற்றால் பல மாநிலங்களில் கொரோனா நோயாளிகள் அவதியுற்று வருகின்றனர். இந்தத் தகவல்கள் அனைத்தும் தற்போது ஊடகங்கள் வழியாகப் பல உலக நாடுகளை எட்டியிருக்கின்றன. இதனால் சீனா, அமெரிக்கா உட்பட நாடுகள் இந்தியாவிற்கு உதவிக்கரம் நீட்டுவதற்கும் முன்வந்து இருக்கின்றன.
அதிலும் குறிப்பாக மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத், உத்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்கு ஆக்சிஜன் இல்லாமல் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதை ஊடகங்கள் சுட்டிக் காட்டி உள்ளன. மேலும் இந்த மாநிலங்களில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்குவதற்கு உரிய படுக்கை இல்லாமல் ஆட்டோவிலும் ஆம்புலன்ஜிலும் வைத்து சிகிச்சை அளித்து வருவதைப் போன்ற புகைப்படங்களையும் வீடியோக்களையும் சமூக வலைத்தளங்களிலும் பார்க்க முடிகிறது.
அதோடு இறந்தவர்களை புதைப்பதற்குக் கூட இடமில்லாமல் ஆங்காங்கே சாக்கு மூட்டைகளைப் போன்று ஆம்புலன்ஜில் திணித்து எடுத்துச் செல்வதையும் ஒட்டுமொத்தமாக வைத்து எரித்து வருவதையும் கடந்த சில தினங்களாக ஊடகங்கள் வெளிச்சத்திற்கு கொண்டு வருகின்றன. இந்நிலையில் உத்திரப்பிரதேசத்தில் சுகாதார அமைப்பில் கடும் சிக்கல் ஏற்பட்டு உள்ளதாகவும் அதோடு அரசாங்கம் உயிரிழப்போரின் எண்ணிக்கையைத் தொடர்ந்து மறைத்து வருவதாகவும் பரவலாகக் குற்றம் சுமத்தப்படுகிறது.
இந்நிலைமை உத்திரப்பிரதேசத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையே இல்லை. ஆக்சிஜன் இல்லை என்பது போன்ற பொய்யான தகவல்களை வெளியிடும் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உ.பி முதல்வர் யோகி ஆதித்யனாத் கடும் எச்சரித்து விடுத்துள்ளார். இந்த எச்சரிக்கையை தொடர்ந்து நடிகர் சித்தார்த் தனது டிவிட்டரில் “சாமானியராக இருந்தாலும் சரி, சாமியாராக இருந்தாலும் சரி, பொய் சொன்னால் அறை விழுவதை எதிர்க்கொள்ள வேண்டும்” என மறைமுகமாக கருத்து வெளியிட்டு இருக்கிறார்.
Any false claims of being a decent human being or a holy man or a leader will face one tight slap. https://t.co/3ORv22zVCV
— Siddharth (@Actor_Siddharth) April 27, 2021