ஸ்டெர்லைட் விவகாரம்: ஜக்கிவாசுதேவுக்கு பிரபல தமிழ் நடிகர் கண்டனம்
- IndiaGlitz, [Thursday,June 28 2018]
தூத்துகுடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அந்த பகுதி மக்கள் நடத்திய போராட்டம் 13 பேர் பலியுடன் ஒருவழியாக முடிவுக்கு வந்தது. இந்த போராட்டத்தின் எதிரொலியாக ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு சீல் வைத்து மூடியது. இதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் பொதுமக்களும் பாராட்டு தெரிவித்தனர்
ஆனால் இன்னும் ஒருசிலர் ஸ்டெர்லைட் ஆலையை மூடியது தவறு என்றும், இந்த ஆலையை மூடியதால் வெளிநாட்டில் இருந்து காப்பர் வாங்க வேண்டிய நிலை வரும் என்றும் கூறி வருகின்றனர். அவ்வாறு கூறியவர்களில் ஒருவர் ஜக்கிவாசுதேவ். இவர் சமீபத்தில் தனது டுவிட்டரில் எனக்கு காப்பர் தொழில்நுட்பம் குறித்து தெரியாது. ஆனால் நமக்கு தேவையான காப்பரை நாம் உற்பத்தி செய்யவில்லை என்றால் சீனாவில் இருந்து வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றும், ஆலையில் சுற்றுச்சூழல் மீறப்பட்டிருந்தால் அதனை சட்டப்படி சரி செய்திருக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். ஏற்கனவே கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பாபா ராம்தேவ், ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக கருத்து கூறியிருந்த நிலையில் தற்போது ஜக்கிதேவும் அதே கருத்தை கூறியது அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது
இந்த நிலையில் ஜக்கிதேவின் கருத்துக்கு நடிகர் சித்தார்த் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் யோகாவை தவிர வேறு எதுவும் பேசுவதில்லை. காப்பர் ஆலையின் பயன்கள் குறித்து பேசுவதற்கு இது சரியான நேரம் இல்லை சத்குரு அவர்களே. மக்கள் காவல்துறையினரால் கொலை செய்யப்பட்டுள்ளனர். நாட்டு மக்களை சுட்டு கொலை செய்தது குறித்து பேசுங்கள்' என்று ஜக்கிதேவுக்கு அவர் பதிலடி கொடுத்துள்ளார்.