பாபா ஒரு மகான், அவர் மீது சுமத்தப்பட்டது பொய்க்குற்றச்சாட்டு: தமிழ் நடிகர் பேட்டி!
- IndiaGlitz, [Tuesday,June 15 2021]
சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள சர்வதேச பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானது என நடிகரும் அவரின் சீடருமான சண்முகராஜன் கூறியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்தபோது சண்முகராஜன் கூறியதாவது:
கடந்த பல வருடங்களாக பாபாவுடன் பழகியிருக்கிறேன். அவருடைய சீடராக உள்ளேன். அவர் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு பொய். அவர் பெண்களை தொடுவது கூட இல்லை, அவர் யோகிராம்சுரத்குமார் போன்ற மகான்களை சேர்ந்தவர் என்று தெரிவித்துள்ளார். மேலும் இதற்கெல்லாம் காரணம் முன்னாள் மாணவர்கள் தான் என்றும் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதால் பாபா மீது தவறான குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகிறார்கள் என்றும் நடிகர் சண்முகராஜன் தெரிவித்துள்ளார்
ஒரு சில ஆசிரியர்கள் மற்றும் அட்மின்கள் செய்த தவறை தற்போது பத்மா சேஷாத்ரி பள்ளி விவகாரம் நடந்த சூழலில் பாபா மீது அனைவரும் திசை திருப்பி உள்ளார்கள் என்றும் கூறினார். மேலும் பாபா நடத்திவரும் பள்ளி, பிராமணர்கள் படிக்கும் பள்ளி என்று ஊடகங்கள் கூறி வருவது பொய்யானது என்றும் அந்த பள்ளியில் அனைத்து ஜாதியினரும் படிக்கின்றார்கள் என்றும் பாபா அனைத்து மதங்களுக்கும் பொதுவானவர் என்றும் அவர் தனது ஆசிரமத்தில் உள்ளேயே மசூதி, ஜெயின் கோயில் உள்பட அனைத்தும் கட்டி உள்ளார் என்றும் கூறியுள்ள சண்முகராஜன், அவர் நிரபராதி என்றும் அவர் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை கூறி வருகின்றார்கள் என்றும் இதனை சட்டபூர்வமாக எதிர்கொள்வோம் என்றும் நடிகர் சண்முகராஜன் தெரிவித்துள்ளார்.
நடிகர் சண்முகராஜன், கமல்ஹாசன் நடித்த ‘விருமாண்டி’, ‘விக்ரம் நடித்த ‘அன்னியன்’, விஷால் நடித்த ‘சண்டக்கோழி’ உள்பட பல தமிழ்ப்படங்களில் நடித்துள்ளார்.