நீட் தேர்வு மிகவும் அவசியமானது: பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த செந்தில்!

  • IndiaGlitz, [Friday,February 11 2022]

நீட் தேர்வு மிகவும் அவசியமானது என்றும் நீட்தேர்வு இருப்பதால் தான் அதிக அளவிலான மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்க்கின்றனர் என்றும் தேர்தல் பிரச்சாரத்தின் போது நடிகர் செந்தில் பேசியுள்ளார்.

தமிழ் காமெடி நடிகர்களில் பிரபலமானவர் நடிகர் செந்தில் என்பதும் இவர் அரசியலிலும் சில ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறார் என்பதும் தெரிந்தது. ஆரம்பத்தில் அதிமுகவில் இணைந்த செந்தில் அதன் பிறகு ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு தினகரனின் அமமுகவில் இணைந்தார். கடந்த மே மாதம் தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறும் போது திடீரென அவர் அமமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.

இந்த நிலையில் தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலில் பாஜக வேட்பாளர்களுக்காக அவர் பிரசாரம் செய்து வருகிறார். மதுரை அருகே அவர் பிரச்சாரம் செய்தபோது, ‘நீட் தேர்வு மிகவும் அவசியமானது என்றும் அரசியல் செய்யவே நீட் தேர்வு வேண்டாம் என எதிர்க்கட்சிகள் கூறுகிறார்கள் என்றும் நீட்தேர்வு இருப்பதால்தான் தமிழ்நாட்டில் முன்பைவிட தற்போது அதிக மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்க்கின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் நம்மையெல்லாம் அச்சுறுத்திய கொரோனா வைரஸை ஒழித்தது பிரதமர் மோடி தான் என்றும் ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் கிராமங்களில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டு வருவதாகவும் இது போன்ற திட்டங்கள் தொடர்ந்து கிடைக்க வேண்டும் என்றால் பாஜகவுக்கு வாக்களியுங்கள் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்