கசப்பு மருந்தாக இருந்தாலும் ஊரடங்கை ஏற்று கொள்ளத்தான் வேண்டும்: பிரபல நடிகர்
- IndiaGlitz, [Wednesday,April 15 2020]
உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் கடந்த சில நாட்களாக மிக வேகமாக பரவி வருகிறது. இதுவரை இந்தியாவில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஏப்ரல் 14ஆம் தேதி வரை 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து நேற்று மீண்டும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார். இதன்படி வரும் மே மாதம் மூன்றாம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து தற்போது பிரபல நடிகரும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் இதுகுறித்து கூறியதாவது:
ஊரடங்கு நீட்டிக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்திருப்பது, தவிர்க்கமுடியாத ஒன்று, அதை மக்கள் நிதர்சனத்தோடு ஏற்று கொள்ள வேண்டும். ஊரடங்கு நடவடிக்கைகள் கசப்பு மருந்தாக இருந்தாலும், அது நமக்காகவும், நாட்டின் நலனுக்காகவும் என்பதை மனதில் கொண்டு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். மேலும் தமிழக அரசு மத்திய அரசிடம் உரிய நிதி பெற்று ஏழை, எளிய மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு அவர்களது வங்கிக்கணக்கில் செலுத்த உதவ வேண்டும் என சரத்குமார் கூறியுள்ளார்.