குடும்பமாக நீருக்குள் நீச்சல்… வேறலெவல் சேலஞ்ச் செய்த நடிகர் சரத்குமார் ஃபேமிலி!
- IndiaGlitz, [Friday,July 07 2023]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருந்துவரும் நடிகர் சரத்குமாரின் ஒட்டுமொத்த குடும்ப உறுப்பினர்களும் இணைந்து வித்தியாசமான ஒரு முயற்சியில் ஈடுபட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் ‘சூர்யவம்சம்’, ‘நாட்டாமை’ என்று இமாலய வெற்றிப்படங்களில் நடித்தவர் நடிகர் சரத்குமார். இன்றைக்கும் நடிகர் விஜய்குமாருக்குப் பிறகு கிராம பஞ்சாயத்து தலைவர் கேரக்டருக்கு இவர்தான் கணக் கச்சிதமாகப் பொருந்துகிறார். அந்த வகையில் கம்பீரமான தோற்றம் கொண்ட இவர் ஹீரோ வேடத்தைத் தவிர வில்லன், போலீஸ் என்று பல கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானார்.
சமீபத்தில் வெளியாகிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடிகர் சரத்குமார் பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடித்து நடிப்பில் தூள் கிளப்பியிருந்தார். அதேபோல ‘போர்த்தொழில்’ திரைப்படமும் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்திருக்கிறது.
இவரைத் தொடர்ந்து இவருடைய மனைவி ராதிகா சரத்குமாரும் தொலைக்காட்சி தொடர்களில் கவனம் செலுத்தி வருகிறார். இவருடைய முதல் மகள் வரலட்சுமி சரத்குமார் தமிழ் சினிமாவில் ஹீரோயின் வேடத்தைக் காட்டிலும் வில்லி கேரக்டர்களில் அதிகளவில் நடித்து வருகிறார். அந்த வகையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று பல மொழிகளில் நடித்து பிரபலமாகி இருக்கும் இவரின் நடிப்பு ரசிகர்களிடையே தனி வரவேற்பை பெற்று வருகிறது.
இப்படி ஒட்டுமொத்த குடும்பத்திலும் பல சினிமா பிரபலங்கள் இருந்துவரும் நிலையில் இவர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து வித்தியாசமான முயற்சி ஒன்றில் ஈடுபட்டுள்ளனர். அதாவது நடிகர் சரத்குமார், ராதிகா சரத்குமார், மகள்களான வரலட்சுமி, பூஜா ஆகியோருடன் மகன் ராகுல் என்று அனைவரும் ஒன்றாக ஒரே நேரத்தில் நீச்சல் குளத்திற்குள் மூழ்க வேண்டும். பின்னர் குளத்திற்குள்ளேயே இருந்தவாறு நீந்த வேண்டும்.
இப்படியொரு வித்தியாசமான முயற்சியை நீண்டநாட்களாக செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டேன் என்று வரலட்சுமி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ள நிலையில் இந்த வீடியோ இணையத்தில் வீடியோ வைரலாகி வருகிறது.
இந்த சேலஞ்சில் நடிகர் சரத்குமார் மட்டுமே நீண்ட நேரம் தண்ணீருக்குள் தாக்குப்பிடித்து நீந்துகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ரசிகர்கள் அவருடைய உடல்வலிமையைப் பாராட்டி வருவதும் குறிப்பிடத்தக்கது.