அமமுகவில் இருந்து விலகும் பிரபல தமிழ் நடிகர்?
- IndiaGlitz, [Tuesday,July 30 2019]
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்ததால் அதிருப்தி அடைந்த நடிகர் ரஞ்சித் பாமகவில் இருந்து விலகினார் என்பதும், அதன் பின் அவர் தினகரன் முன்னிலையில் அமமுகவில் இணைந்தார் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது அமமுக நிர்வாகத்தினரால் ரஞ்சித் கண்டுகொள்ளப் படவில்லை என்றும், தினகரனும் ரஞ்சித்தை ஒரு பொருட்டாக கருதவில்லை என்றும் கூறப்பட்டது. இதனால் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக தற்போது அமமுகவில் இருந்து விலக ரஞ்சித் முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
நடிகர் ரஞ்சித் விரைவில் பாஜகவில் இணைய இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன. பாஜக நிர்வாகிகள் அவரை அடிக்கடி தொடர்பு கொண்டு தங்கள் கட்சியில் இணைய வலியுறுத்துவதாகவும் விரைவில் அவர் பாஜகவில் இணைய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் அதே நேரத்தில் ரஞ்சித் திமுகவில் இணைய வாய்ப்பு இருப்பதாக ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். விரைவில் இது குறித்து தனது முடிவை நடிகர் ரஞ்சித் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும் அமமுகவிலிருந்து கடந்த சில நாட்களாக முக்கிய தலைவர்கள் விலகி வரும் நிலையில் நடிகர் ரஞ்சித்தும் விலக இருப்பது உறுதி செய்யப்பட்டதாக தெரிகிறது.