போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக “பாகுபலி“ நடிகரிடம் விசாரணை!
- IndiaGlitz, [Wednesday,September 08 2021]
பிரபல தெலுங்கு நடிகர் ராணா “பாகுபலி“ திரைப்படத்தில் நடித்து பிரபலமானார். அவரிடம் அமலாக்கத்துறை போதைப்பொருள் தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. கடந்த 2017 ஆம் ஆண்டு போடப்பட்ட இந்த போதைப்பொருள் வழக்கு அமலாக்கத்துறை வசம் இருந்ததால் தற்போது விசாரணை நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.
நடிகர் ராணாவைத் தவிர நவ்தீப், ரவிதேஜா, இயக்குநர் பூரி ஜெகன்நாத், நடிகைகள் சார்மி, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட 12 பேர் மீது இந்த வழக்கு பதியப் பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து இயக்குநர் பூரி ஜெகன்நாத், நடிகைகள் சார்மி, ரகுல் ப்ரீத் சிங் ஆகியோரிடம் அமலாக்கத்துறை ஏற்கனவே விசாரணை நடத்தி உள்ளனர்.
தெலுங்கு வட்டாரத்தில் நடைபெற்று வரும் இந்த விவகாரத்தில் போதைப்பொருள் மட்டுமல்ல பண மோசடியும் நடைபெற்று இருக்கலாம் என்று அமலாக்கத்துறை சந்தேகம் அடைந்துள்ளது. அந்த அடிப்படையில் நடிகர் ராணாவின் வங்கி பண பரிமாற்ற நடவடிக்கைகளை விசாரிப்பதற்காக அவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் அழைத்துள்ளனர். அவர் ஹைத்ராபாத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று ஆஜராகி உள்ளார்.
முன்னதாக பாலிவுட் வட்டாரத்தில் போதைப்பொருள் விவகாரம் பீதியை கிளப்பியது. அடுத்து கன்னட சினிமாவிலும் போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டனர். தற்போது தெலுங்கு சினிமாவில் பலரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. ஆனால் இதுவரை யார் மீதும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.