சொந்த உழைப்பில் வாழ்பவர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள்: பிரபல நடிகர் கருத்து
- IndiaGlitz, [Saturday,August 03 2019]
அரசியல் என்பது முழுக்க முழுக்க மக்கள் சேவை என்ற நிலை காமராஜர், கக்கன் காலத்துடன் முடிந்துவிட்டது. இன்றைய அரசியல் ஒரு வியாபாரம் ஆகிவிட்டது. தேர்தலின்போது முதலீடு செய்யும் அரசியல்வாதிகள் ஆட்சிக்கு வந்ததும் முதலீட்டை விட நூறு மடங்கு சம்பாதிப்பதுதான் இன்றைய அரசியல்வாதிகளின் நிலையாக உள்ளது. இதில் விதிவிலக்கு இருக்குமா? என்பது சந்தேகமே. இந்த நிலையில் தன் உழைப்பில் தான் வாழனும் என்று நினைப்பவர் எவரும் அரசியலுக்கு போக மாட்டார்கள் என்று பிரபல குணசித்திர நடிகர் ராஜ்கிரண் தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது:
எல்லா அரசியல் கட்சிகளிலும் சேர்பவர்கள், ஏதாவதொரு பிரதிபலனை எதிர்பார்த்துதான் சேர்கிறார்கள். இதற்கு எந்தக் கட்சியும் விதிவிலக்கல்ல. எந்த தொண்டர்களும் விதிவிலக்கல்ல. தொண்டர்களில் ஆயிரத்தில் ஒருவர் விதிவிலக்காக இருக்கலாம். மக்களுக்கு சேவை செய்ய கட்சி ஆரம்பிக்கிறோம் என்பதும், அதே காரணத்தை சொல்லி கட்சியில் தொண்டர்கள் இணைவதும் வெறும் நகைச்சுவையே.
தன் உழைப்பில் தான் வாழனும் என்று நினைப்பவர் எவரும் அரசியலுக்கு போக மாட்டார்கள். மக்களுக்கு சேவை செய்ய நினைப்பவர்கள், தங்கள் சுய உழைப்பாலும், சுய உழைப்பில் வந்த பணத்தாலும் சேவை செய்ய வேண்டும். சேவை மனப்பான்மை உள்ள ஒவ்வொருவரும், ஐந்து பேருக்கு உதவினாலே போதும். நாடு நலமாகி விடும். நிதி வசூலித்து சேவை செய்கிறோம் என்கிற இடத்தில்தான், ஊழலின் ஊற்றுக்கண் திறக்கிறது.
இவ்வாறு நடிகர் ராஜ்கிரண் தனது சமூக வலைத்தள பக்கத்தின் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.