ரஜினிக்கு அனுப்பப்பட்ட சம்மன்: நேரில் ஆஜராவாரா?
- IndiaGlitz, [Monday,December 21 2020]
தூத்துக்குடி துப்பாக்கி சூடு விசாரணை தொடர்பாக ரஜினிக்கு சம்மன் அனுப்பப்படும் என விசாரணை ஆணையத்தின் வழக்கறிஞர் சமீபத்தில் தெரிவித்திருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் ரஜினிக்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ள தகவல் வெளிவந்துள்ளது.
கடந்த 2018ஆம் ஆண்டு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது திடீரென துப்பாக்கிச் சூடு ஏற்பட்டது. இதில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து விசாரணை செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டது.
இந்த நிலையில் துப்பாக்கி சூடு சம்பவத்தின்போது ஏற்பட்ட வன்முறைக்கு சமூக விரோதிகளே காரணம் என்று பேட்டி அளித்த ரஜினிக்கு கடந்த பிப்ரவரி மாதம் சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. ஆனால் ரஜினிகாந்த் நேரில் ஆஜராகாமல் அவரது தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் ரஜினிக்கு மீண்டும் சம்மன் அனுப்பி அவரிடம் விசாரணை செய்யப்படும் என விசாரணை ஆணையத்தின் வழக்கறிஞர் சமீபத்தில் தெரிவித்திருந்தார். அதன்படி தற்போது வரும் ஜனவரி 19ஆம் தேதி ரஜினிகாந்த் நேரில் விசாரணை ஆணையம் முன் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த முறை ரஜினி நேரில் ஆஜராவாரா? என்பதை பொறுத்திருந்து பார்போம்.