மனநோய் உள்ளவர்களால் மட்டுமே இந்த கொடுமையை செய்ய முடியும்: சாத்தான்குளம் விவகாரம் குறித்து கோலிவுட் நடிகர்
- IndiaGlitz, [Saturday,June 27 2020]
சாத்தான்குளம் விவகாரம் குறித்து கோலிவுட் திரையுலகினர் மிகவும் தீவிரமாக தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் தொடர்ந்து ஆவேசமான கருத்துக்களை தெரிவித்து வருவது குறித்து அவ்வபோது பார்த்து வருகிறோம். இந்த நிலையில் இந்த விஷயம் குறித்து நடிகர் பிரசன்னா தனது சமூக வலைத்தளத்தில் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறியது இதுதான்:
சாத்தான்குளம் இரட்டை கொலை ஏதோ ஒரு லாக்கப் மரணம் என்று கடந்து செல்ல இயலாது. அதன் விவரங்கள் படிக்கையில் வார்த்தைகளற்றுபோகும்படியான மிக குரூரமான விதத்தில் ஜெயராஜ் மற்றும் ஃபெனிக்ஸ் தாக்கப்பட்டிருப்பது மனிதத்தன்மையற்ற காரியம். ஆழ்ந்த மனநோய் உள்ளவர்களால் மட்டுமே இப்படியான கொடுமையை செய்ய முடியும். கொரோனா எதிர்ப்பு நடவடிக்கையில் தன்னலமின்றி சேவை செய்து இன்னுயிரையும் தந்த தேவதை காவலர்க்கிடையில் இப்படியான கொடுஞ்செயல் சாத்தான்கள் களையெடுக்கப்படவேண்டும்.
நீதியும், கொல்லப்பட்ட உயிர்களுக்கான நியாயமும் நிலைநாட்டப்படவேண்டும். அதிகார துஷ்ப்ரயோகம் செய்யாது நிலையில் நின்று காவல் பணி செய்திட மற்ற காவலருக்கு அறிவுறுத்தப்பட்ட வேண்டும். பல பேரழுத்தங்களிலுள்ள காவலருக்கு எல்லை மீறாதிருக்க உளவியல் ஆலோசனைகள் வழங்கிடவேண்டும். காவல்துறை உங்கள் நண்பன் என்னும் வாக்கியத்தில் ஏதேனும் உண்மை இருப்பின் அதை நிரூபித்து நம்பிக்கை கொள்ளச்செய்ய வெண்டும்.
இவ்வாறு நடிகர் பிரசன்னா கூறியுள்ளார்.
#JusticeForJeyarajAndFenix pic.twitter.com/TgWS05b9qv
— Prasanna (@Prasanna_actor) June 27, 2020