மின்வாரியத்திடம் வருத்தம் தெரிவித்து பிரசன்னா வெளியிட்ட அறிக்கை!
- IndiaGlitz, [Wednesday,June 03 2020]
நடிகர் பிரசன்னா நேற்று தனது சமூக வலைத்தளத்தில் மின்வாரியம் குறித்து பதிவு செய்த ஒரு டுவீட் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இன்று மாலை மின்வாரிய அலுவலகம் பிரசன்னாவின் குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்தது. மேலும் பிரசன்னாவின் கடுமையான விமர்சனத்திற்கு கண்டனமும் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் மின்வாரியத்திடம் வருத்தம் தெரிவித்து நடிகர் பிரசன்னா ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
உண்மைதான்! ரீடிங் எடுப்பதிலிருந்து 10 நாட்களுக்குள் பொதுவாக கட்டணம் செலுத்தும் பழக்கமுள்ள நான், மார்ச் மாதம் ரீடிங் எடுக்காததால் கட்டணம் செலுத்த தவறியது உண்மைதான். அதே அளவு இதற்குமுன் காலதாமதமின்றி தவறாமல் கட்டணம் செலுத்திவருகிறேன் என்பதும் உண்மை. வாரியம் சொல்வதுபோல் நான்கு மாத கணக்கீட்டாலும் மார்ச் மாத கட்டணம் சேர்த்தும் எனக்கு தனிப்பட்ட கட்டணம் கூடுதலாக வந்திருக்கலாம். என் தனிப்பட்ட பிரச்னையாக இதை நான் எழுப்பவில்லை. அதிக தொகை கட்டணமாக வந்திருப்பதாக எவ்வளவுபேர் நினைக்கிறார்களென்று அறிந்துகொள்ளவே என் ட்வீட்.
மின்வாரியத்தை குறை சொல்வதோ குற்றம் சாட்டுவதோ என் நோக்கமல்ல. பொதுவாக எல்லோருக்கும் வந்திருப்பதாக சொல்லப்படும் அதிக கட்டணம் குறித்த கவன ஈர்ப்பும், அதன்மூலம் வாரியமோ அரசோ இந்த இக்கட்டான சூழலில் ஏதாவது முறையில் இப்பிரச்னையில் மக்களுக்கு ஒரு தளர்வோ கட்டணம் செலுத்த தவணை அல்லது கால அவகாசமோ தருமாயின் மிக்க உதவியாக இருக்கும் என்பதே என் வேண்டுகோள். நேற்றய தொலைக்காட்சி உரையாடலிலும் அதையே நான் குறிப்பிட்டிருக்கிறேன். ஊரடங்கு காலங்களில் மருத்துவ, காவல், சுகாதார துறைகள் போலவே மின்வாரிய ஊழியர்களும், அதிகாரிகளும் அயராது பணியாற்றியிருக்கிறார்கள் என்பதை நன்றியோடு பாராட்டவும் நான் மறக்கவில்லை. மற்றபடி வாரியாதையோ அரசையோ குறை கூறுவதற்கான உள்நோக்கமில்லை. உள்நோக்கமில்லாதபோதும் என் வார்த்தை மின்வாரிய ஊழியர்கள், அதிகாரிகள் மனம்நோகச் செய்திருப்பின் அதற்காக வருந்துகிறேன். மக்கள் மீது விழுந்திருக்கும் இந்த எதிர்பாரா சுமையை வாரியமும் அரசும் இறக்கிவைக்குமென எதிர்பார்க்கிறேன்.
பி.கு: என் வீட்டிற்கு நிர்ணயிக்கப்பட்ட முழு தொகையும் எந்த நிலுவையுமின்றி இன்று காலை நான் செலுத்திவிட்டேன்.
இவ்வாறு நடிகர் பிரசன்னா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
#TNEB my true intention, response and request.... pic.twitter.com/v8r78BmD3G
— Prasanna (@Prasanna_actor) June 3, 2020