இங்கிலாந்து பல்கலையில் படிக்க பட்டியலின மாணவிக்கு உதவிய தமிழ் நடிகர்!
- IndiaGlitz, [Wednesday,October 07 2020]
இங்கிலாந்து பல்கலைக்கழகத்தில் படிக்க பட்டியலின மாணவி ஒருவருக்கு தமிழ் நடிகர் ஒருவர் உதவி செய்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திராவின் மேற்கு கோதாவரி என்ற பகுதியைச் சேர்ந்த மாணவி சந்தனா, கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பில் சிறந்த மாணவியாக தேர்ச்சி பெற்றார். இவர் நல்ல தேர்ச்சி சதவீதத்தை பெற்றிருந்ததால் இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் சிட்டி சால்ஃபோர்டு என்ற பல்கலைக்கழகத்தில் படிக்க அவருக்கு இடம் கிடைத்தது.
ஆனால் சந்தனாவின் அப்பா கடந்த ஒன்பது வருடங்களுக்கு முன்பே இறந்து விட்டதால் தாயின் பராமரிப்பில் வளர்ந்து வந்ததால் இங்கிலாந்து சென்று படிப்பதற்கு குடும்ப வறுமை தடையாக இருந்தது. இது குறித்து கேள்விப்பட்ட நடிகர் பிரகாஷ்ராஜ் உடனடியாக சந்தனாவின் மேல் படிப்பிற்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்தார். இதனை அடுத்து அவர் இங்கிலாந்து பல்கலைக்கழகத்தில் படிப்பதற்கு தேவையான கட்டணம், தங்குமிடத்திற்கான செலவு, போக்குவரத்து செலவு உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் ஏற்றுக்கொண்டார்.
இதனால் மிகவும் நெகழ்ச்சி அடைந்த மாணவி சந்தனா தனது குடும்பத்தினருடன் பிரகாஷ்ராஜை சந்தித்து நன்றி தெரிவித்ததோடு உங்களை எனது தந்தை உருவில் காண்கிறேன் என்று கூறியது பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
ஏற்கனவே பிரபல பாலிவுட் வில்லன் நடிகர் சோனு சூட் ஆயிரக்கணக்கானவர்களுக்கு உதவி செய்துவரும் நிலையில் தற்போது பிரகாஷ்ராஜ் என்ற தமிழ் வில்லன் நடிகரும் ஒரு ஏழை பட்டியலின மாணவிக்கு உதவி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.