'ப' வரிசை படங்களின் இயக்குனர் பீம்சிங் 100வது பிறந்த நாள்: பிரபு நெகிழ்ச்சி பதிவு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் சினிமாவில் 'ப' என்ற எழுத்தில் தொடங்கும் பல படங்களை இயக்கியவர் பீம்சிங் என்பதும், இவர் சிவாஜி கணேசனை வைத்து மட்டும் பல படங்களை எடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பாகப்பிரிவினை, படிக்காத மேதை, பெற்ற மனம், பாவமன்னிப்பு, பாசமலர், பாலும் பழமும், பார்த்தால் பசி தீரும், படித்தால் மட்டும் போதுமா, பந்தபாசம், பார் மகளே பார், பச்சை விளக்கு, பழனி, பட்டத்து ராணி, பாலாடை என 17 படங்களை பா வரிசை படங்களாக இயக்கியுள்ளார் என்பதும், இதில் 15 படங்களில் சிவாஜி கணேசன் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும், களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தில் கமல்ஹாசனை சிறுவயது நட்சத்திரமாக அறிமுகம் செய்ததும் பீம்சிங் தான் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் படங்கள் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களையும் இயக்கியுள்ளார். மொத்தம் 67 படங்களை இயக்கியுள்ளார். இவரது மனைவி சுகுமாரியும் பிரபல நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், 1924 ஆம் ஆண்டு அக்டோபர் 15ஆம் தேதி பிறந்த பீம்சிங் 100வது பிறந்த நாள் இன்று சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு சிவாஜி கணேசனின் மகனும் நடிகருமான பிரபு, நெகிழ்ச்சியுடன் தனது கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அவை பின்வருமாறு:
இன்று இயக்குநர் ஏ.பீம்சிங் அவர்களின் நூறாவது பிறந்தநாள்..... பீம்சிங் அவர்களின் நூற்றாண்டு... இந்த நாளில் அவரைப் பற்றி நினைக்கும் போது எனக்கு பெருமையாகவும் நெகிழ்ச்சியாகவும் இருக்கிறது. அப்பா அவரை பீம் பாய் என்று தான் செல்லமாக அழைப்பார். அப்பா நடித்த படங்களில் உதவி இயக்குனராக இருந்தவர். அவரை 'செந்தாமரை' படத்தில் இயக்குனராக அறிமுகப்படுத்தினார். அந்த படம் முடிய தாமதம் ஆனாலும், உடனே கால்ஷீட் கொடுத்து 'அம்மையப்பன்', 'ராஜா ராணி' படங்களில் நடித்திருக்கிறார். அதன் பிறகு அவர் நண்பர்களுடன் இணைந்து தயாரித்து, அவர் இயக்கிய 'பதி பக்தி' படத்திலும் நடித்தார்.
மற்ற நடிகர்களை வைத்து படங்கள் இயக்கினாலும் அப்பா நடிப்பில் பாகப்பிரிவினை, படிக்காத மேதை, பெற்ற மனம், பாவமன்னிப்பு, பாசமலர், பாலும் பழமும், பார்த்தால் பசி தீரும், படித்தால் மட்டும் போதுமா, பந்த பாசம், பார் மகளே பார், பச்சை விளக்கு, பழனி, பட்டத்து ராணி, சாந்தி, பாலாடை, பாதுகாப்பு போன்ற பத்தொன்பது படங்களை இயக்கினார்.
அவர், சாந்தி படத்தின் இந்தி பாதிப்பை சிவாஜி பிலிம்ஸ் தயாரிப்பில் சுனில்தத் நடிப்பில் கௌரி என்கிற பெயரில் இயக்கினார். அதே போல சிவாஜி பிலிம்ஸ் தயாரிப்பில் 'பாசமலர்' படத்தை இந்தியில் 'ராக்கி' என்கிற பெயரில் அசோக் குமார் நடிப்பில் இயக்கினார். இப்படி தமிழ் படங்களின் பெருமையை இந்தி் வரை கொண்டு சென்ற பெருமைக்குரிய இயக்குநர் பீம்சிங். காலத்தால் அழியாத பல காவிய படங்களை தந்தவர்... குடும்பக் கதைகளின் எதார்த்த இயக்குனர்... காட்சிகளில் எளிமை... வசனங்களில் புதுமை... பாடல்களில் இனிமை... தமிழ் சினிமாவின் ஆளுமை.... என்று திகழ்ந்தவர்.
அவருக்கு இன்று நூறாவது ஆண்டு என்கிற போது எனக்கு நெகிழ்ச்சியாக இருக்கிறது. அப்பா இருந்திருந்தால் அவரை கொண்டாடி மகிழ்ந்திருப்பார்... காலம் என்னவோ அவர்களை எடுத்து கொண்டு விட்டது.
ஆனால், அவரது ஆன்மா தனது படைப்புகள் மூலம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. படைப்புக்கும் அழிவில்லை. படைத்தவருக்கும் அழிவில்லை... கலைஞர்கள் எப்போதுமே மக்களுக்கானவர்கள்... அவர்கள் எப்போதும் மக்களோடு வாழ்ந்து கொண்டிருப்பார்கள்... பீம்சிங்கும் அய்யாவும் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
அன்புடன் பிரபு"
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com