தம்பி குற்றச்சாட்டுக்கு நடிகர் நாசர் விளக்கம்
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் நாசரின் மனைவி கமீலா நாசர், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் வேட்பாளராக மத்திய சென்னையில் போட்டியிடுகின்றார். இந்த நிலையில் நாசர் மற்றும் அவரது மனைவி குறித்து சமீபத்தில் நாசரின் சகோதரர் ஜவஹர் என்பவர் பல திடுக்கிடும் குற்றச்சாட்டுக்களை தெரிவித்திருந்தார். நாசர் தனது பெற்றோர்களை கவனித்து கொண்டதில்லை என்பது அவற்றில் ஓன்று
இந்த நிலையில் தம்பி ஜவஹரின் குற்றச்சாட்டுக்கு தற்போது நாசர் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:
என்னை அறிந்தோர் புரிந்தோர் எல்லோருக்கும் என் வணக்கங்கள்.
சமீபகாலமாக என் குடும்பம்சார் பிரச்சினைகள் எல்லா ஊடகங்களிலும் வந்து கொண்டிருக்கின்றன.
கமிலா நாசருக்கு “ஓட்டுப் போட்டுவிடாதீர்கள் “ என்ற ஒரு செய்தி கடத்தவே ஒரு குடும்பத்தை வீதிக்கு இழுப்பது கேவலம் என்று கருதுகிறேன். இதற்கு பின்னால் ஆதாயம் பெறும் அரசியல் வித்தகர்கள் பின் நின்று ஆட்டுவிக்கிறார்கள் என்று நான் எண்ணுவது இயற்கையானது.
நாசரின் நிழலின் கீழ் வளர்ந்தவர் அல்ல கமிலா. என்னைப் போலவே அவருக்கான தனித்துவம், தனித்திறன் இருக்கிறது.
நான், அல்லது நாங்கள் ஒன்றும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டை விளக்க என் 40 வருட வாழ்க்கை உங்களுக்கு சொல்ல வேண்டும். அதற்கான தருணம் இதுவல்ல. ஆனால், நான் விளக்குவேன். உரிய நேரத்தில் உரியவர்க்கு செய்ய வேண்டியது செய்யப்பட்டது. குடும்பத்தில் ஒருவருடைய பலமான தூண்டுதல் பேரிலேயே என்னுடைய கடமை தடை செய்யப்பட்டது. அதைமீறியும் என் கடமைகளை நிறைவேற்றிக் கொண்டுதான் இருக்கிறேன்.பல விஷயங்கள் மறைக்கப்பட்டு, நடந்த சில விஷயங்கள் திரிக்கப்பட்டு, வலு சேர்க்க சிலவற்றை புனையப்பட்டு, இச்சகதி எங்கள் மேல் வீசப்பட்டிருக்கிறது.
வேட்பாளர் ஒருவர் மீது சுமத்துவதற்கு பழி ஒன்றும் கிடைக்காத போது வீசப்பட்ட சகதி எங்கள் பொது வாழ்க்கைக்கு கிடைத்த பரிசென்றே கருதுகிறேன். தேர்தலை முன் வைத்து வீசப்பட்ட இச்சகதி தேர்தல் வரை எங்கள் மீதே கிடந்து நாறட்டும். என்ன நடந்தது என்று சொல்ல வேண்டிய கட்டாயத்தை நான் உணரவே செய்கிறேன்.
தேர்தல் நிறைவுறட்டும், நானும் கமிலாவும் வேறு கிரகத்திற்கு பறந்து செல்லப்போவதில்லை. எதிர்கொள்ள தின்மையும் இருக்கிறது. தெளிவும் இருக்கிறது. இப்போதைக்கு இவ்வளவே.
இவ்வாறு நடிகர் நாசர் விளக்கமளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments