சிவாஜி, ரஜினி, கமலிடம் நான் கற்று கொண்டது: எம்.எஸ்.பாஸ்கர் பேட்டி!
- IndiaGlitz, [Monday,January 04 2021]
தமிழ் சினிமாவின் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர்களில் ஒருவரான எம்எஸ் பாஸ்கர் தான் ஏற்று நடிக்கும் கேரக்டரை சிறப்பாக உள்வாங்கி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தும் நடிகர்களில் ஒருவர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தான் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர்களிடம் கற்றுக்கொண்ட ஒரு விஷயத்தை பகிர்ந்து கொண்டார்.
நேரம் தவறாமை என்பதை நான் இவர்களிடம் கற்றுக்கொண்டேன் என்றும், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் தனது முதல் படம் முதல் கடைசி படம் வரை ஒரு நாள் கூட படப்பிடிப்புக்கு தாமதமாக வந்ததில்லை என்று கூறினார். அதேபோல் கமல்ஹாசன் அவர்கள் ’தசாவதாரம்’ படப்பிடிப்பின்போது அதிகாலை 4 மணிக்கெல்லாம் வந்து மேக்கப் போட்டு கொண்டு இருப்பார் அவருடைய தொழில் பக்தியை பார்த்து நான் ஆச்சர்யப்பட்டேன் என்றும் கூறினார்.
அதேபோல் ரஜினிகாந்த் அவர்களுடன் நான் ’சிவாஜி’ படத்தில் நடிக்கும்போது பல அனுபவங்கள் கிடைத்தன என்றும், ஒருநாள் எனக்குப் பிறகு ரஜினிகாந்த் படப்பிடிப்பு தளத்திற்கு வந்தபோது நேராக என்னிடம் வந்து ’மன்னித்துக்கொள்ளுங்கள் நான் லேட்டாக வந்து விட்டானா? என்று கேட்டார். ஒரு பெரிய சூப்பர் ஸ்டார் என்னிடம் அவ்வாறு கேட்க வேண்டிய அவசியமே இல்லை. இவ்வாறு இவர்களிடமிருந்து நான் நேரம் தவறாமையை கற்றுக்கொண்டேன் என்றும், மற்ற நடிகர்களும் அதை கடைபிடிக்க வேண்டும் என்பதே எனது ஆசை என்று நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் கூறியுள்ளார்.